/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மைக்செட் தொழிலாளி கொலை ஆள் மாறாட்ட சம்பவமா
/
மைக்செட் தொழிலாளி கொலை ஆள் மாறாட்ட சம்பவமா
ADDED : செப் 07, 2025 01:35 AM

மானாமதுரை:மானாமதுரை அருகே மைக் செட் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் 20, மைக் செட் அமைக்கும் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று சங்கமங்கலம் கிராமத்தில் செல்வம் என்பவரது புதிய வீட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் புதுமனை புகுவிழாவிற்காக மைக் செட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 3 டூவீலர்களில் வந்த 8க்கும் மேற்பட்டோர் காளீஸ்வரனை வெட்டியதில் காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பலியானார்.
கொலை நடந்த இடத்தை எஸ்.பி., சிவபிரசாத் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி., பார்த்திபன் பார்வையிட்டனர்.
காளீஸ்வரனின் உறவினர்கள் கூறியதாவது:
சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரை மானாமதுரையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த சிலர் வெட்டியதில் படுகாயமடைந்தார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கண்மாயில் வெட்டி கொலை செய்தனர்.
இதையடுத்து இருதரப்பைச் சேர்ந்தவர்களும் மேலும் பழிக்கும் பழியாக கொலை செய்ய வேண்டும் என முயற்சி செய்த நிலையில் பிரவீன் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் நேற்று சங்கமங்கலம் கிராமத்தில் புதுமனை புகுவிழா நடைபெறும் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்து வந்துள்ளனர். தேடி வந்த நபர் இல்லாத நிலையில் அங்கு மைக் செட் போடும் பணியில் ஈடுபட்டிருந்த காளீஸ்வரனை ஆளை மாற்றி வெட்டி கொலை செய்து விட்டதாக கூறினர்.
இறந்தவரின் உறவினர்கள் நான்குவழிச்சாலையில் மானாமதுரை வழிவிடு முருகன் கோயில் அருகே மறியலுக்கு முயன்றனர். போலீசார் சமரசம்பேசினர்.
முன்விரோத கொலை, மோதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள காளீஸ்வரன் பட்டியலினத்தை சேர்ந்தவர்.
இதனால் ஜாதி பிரச்னை ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.