/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுப்பன் கால்வாயில் தேங்கும் கழிவு
/
சுப்பன் கால்வாயில் தேங்கும் கழிவு
ADDED : ஜூலை 16, 2025 01:58 AM

மானாமதுரை : மானாமதுரை வழியாக செல்லும் வைகை ஆறு நீரை இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் சுப்பன் கால்வாயில் குப்பை தேங்குவதால் அதனை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாமதுரை அருகே வேம்பத்துார்,கள்ளர் குளம் பகுதி வழியாக செல்லும் மழைநீர் உப்பாறாக உருவெடுத்து வைகை ஆற்றில் கலக்கிறது. இந்த நீர் மானாமதுரை பகுதியில் உள்ள செய்களத்துார், மஞ்சிக்குளம், கல்குறிச்சி, ஆலங்குளம் உள்ளிட்ட 30 க்கு மேற்பட்ட கண்மாய்கள் 50க்கும் மேற்பட்ட ஊரணிகளை நிரப்பிய பிறகு இளையான்குடி பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சென்று சேரும் வகையில் சுப்பன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு கால்வாய் தோண்டி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. மானாமதுரை மற்றும் இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.
காலப்போக்கில் வைகை ஆற்றில் நடைபெற்ற மணல் கொள்ளை, கால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் வைகை ஆறு மிகவும் தாழ்வாகவும், கால்வாய் மேடாகவும் மாறியதால் தற்போது சுப்பன் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் எங்கு பார்த்தாலும் குப்பை,கழிவு தேங்கி கிடப்பதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மானாமதுரை நகர்ப் பகுதிக்குள் செல்லும் சுப்பன் கால்வாயில் ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளதாலும், கழிவு நீரை விடுவதாலும் விவசாய நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கால்வாயை சீரமைக்க வேண்டுமென்று விவசாயிகள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த வருடம் பொதுப்பணி துறையினர் ரூ.9 கோடி செலவில் கால்வாயை தூர்வார தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். இதுவரை நிதி ஒதுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் சுப்பன் கால்வாய் திட்டம் துார்ந்து போகும் நிலை உள்ளதால் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.