/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய்களில் தண்ணீர் வெளியேற்றம்: விவசாயிகள் தவிப்பு
/
கண்மாய்களில் தண்ணீர் வெளியேற்றம்: விவசாயிகள் தவிப்பு
கண்மாய்களில் தண்ணீர் வெளியேற்றம்: விவசாயிகள் தவிப்பு
கண்மாய்களில் தண்ணீர் வெளியேற்றம்: விவசாயிகள் தவிப்பு
ADDED : ஏப் 18, 2025 11:53 PM
திருப்புவனம்:
திருப்புவனம் கண்மாய்களில் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வெளியேற்றுவதாகவும், நீர் வரத்தை தடுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பிரமனுார், பழையனுார், மாரநாடு, மேலவெள்ளுர் உள்ளிட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்பிடிப்பு கண்மாய்கள் உள்ளன.
வடகிழக்கு பருவமழையின் போதும் வைகை அணையில் இருந்து நீர் திறப்பின் போதும் கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடந்தாண்டு பெய்த மழை காரணமாகவும், வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு போக கால்நடைகள் குடிக்க ஓரளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதுதவிர தற்போது கோடை மழை பெய்துள்ள நிலையில் வைகை ஆற்றிலும் சிறிதளவு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இந்த தண்ணீரை கண்மாய்களுக்கு பொதுப்பணித் துறையினர் திருப்பி விட்டுள்ளனர்.
பொதுப் பணித் துறைக்கு சொந்தமான கண்மாய்களை மீன் பிடி குத்தகைக்கு விட்டுள்ளனர். மீன்பிடி குத்தகைக்கு எடுத்தவர்கள் கண்மாய்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் கால்நடைகள் குடிக்க கூட தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன.
மேலும் வைகை ஆற்றில் வரும் தண்ணீரையும் கண்மாய்களுக்கு விடாமல் தடுக்கும் முயற்சியிலும் குத்தகைக்கு எடுத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரமனுார் சந்திரகுமார் தாசில்தாருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் பிரமனுார் கண்மாயை நம்பி 100 ஏக்கரில் நெல், 200 ஏக்கரில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.
கண்மாய்க்கு வரும் தண்ணீரை தடுக்கும் நோக்கில் சிலர் ஷட்டர்களை அடைத்து வைத்துள்ளனர். இதனால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருகின்றன. எனவே கண்மாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு கண்மாய்களில் தண்ணீரை வெளியேற்றும் குத்தகைதாரர்களின் மீன்பிடி குத்தகையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனனர்.
வரும் காலங்களில் கண்மாய்களில் தண்ணீர் வற்றிய பிறகுதான் மீன் பிடிக்க வேண்டும், மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வெளியேற்ற கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

