/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுார் தடுப்பணையில் நீர்மட்டம் குறைப்பு
/
புதுார் தடுப்பணையில் நீர்மட்டம் குறைப்பு
ADDED : செப் 11, 2025 06:53 AM

திருப்புவனம் : திருப்புவனம் புதுார் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் மஹாளய அமாவாசைக்கு வைகை ஆற்றில் திதி, தர்பணம் கொடுக்க பக்தர்கள் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து நேற்று காலை ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது.
திருப்புவனம் வைகை ஆற்றினுள் அமாவாசை தினங்களில் கொட்டகை அமைத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திதி, தர்ப்பணம் வழங்கி முன்னோர்களை வழிபடுவது வழக்கம். திருப்புவனம் புதுார் வைகை ஆற்றில் கானுார் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் திதி பொட்டல் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. வரும் 21ம் தேதி ஞாயிற்றுகிழமை புரட்டாசி மஹாளய அமாவாசை என்பதால் பக்தர்கள் திதி, தர்ப்பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
நீர்மட்டத்தை பொதுப்பணித்துறையினர் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து தடுப்பணையில் ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிடும், பக்தர்கள் சிரமமின்றி திதி, தர்பணம் கொடுக்க முடியும்.