காரைக்குடியில் உள்ள 140 ரேஷன் கடைகள் மூலம் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நம்பியே கிராம மக்கள் உள்ளனர். பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது.
சர்வர் பிரச்னை காரணமாக பொருட்கள் வழங்குவதில் அவ்வப்போது சிக்கல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
கடைகளில் கார்டுதாரர்களுக்கு பொருட்களுக்கான பில் வழங்க விற்பனையாளர், எடை போட்டு பொருட்களை வழங்க எடையாளர் என இருவர் இருக்க வேண்டும்.
ஆனால் பல ரேஷன் கடைகளில் ஒரு ஊழியர் மட்டுமே உள்ளார். அவரே அனைத்து பணிகளையும் செய்ய வேண்டி உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, ஒரே ஊழியர் கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 கடைகளை பார்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
ஒரே ஊழியர் இரண்டு, மூன்று கடைககளை பார்ப்பதால் கடைகள் எப்போது திறக்கப்படும் என தெரியாமல் மக்கள் தினமும் கடைகளை பார்த்து ஏமாறும் நிலையும் தொடர்கிறது. திறக்கப்படும் நாள் அன்று அனைவரும் பொருட்கள் வாங்க வருவதால் கூட்டம் அதிகமாக காணப்படுவதோடு சர்வர் பிரச்னையாலும் பொருட்கள் வாங்குவதற்குள் மக்கள் படாத பாடு பட வேண்டியுள்ளது.
கூடுதல் பணிச்சுமையாலும், விடுமுறை கிடைக்காததாலும், சரியான நேரத்திற்கு கடையை திறக்க முடியாமலும் பணியாளர்கள் திணறி வருகின்றனர். ரேஷன் கடைகளில் போதிய பணியாளர்களை நியமித்து, ரேஷன் பொருட்களை முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
காரைக்குடி, மே 30-
காரைக்குடி ரேஷன் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.