/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணிப்பூரில் நடப்பது இனக் கலவரம் தமிழகத்தில் நடப்பது சமுதாயப்பிரச்னை கார்த்தி எம்.பி., பேட்டி
/
மணிப்பூரில் நடப்பது இனக் கலவரம் தமிழகத்தில் நடப்பது சமுதாயப்பிரச்னை கார்த்தி எம்.பி., பேட்டி
மணிப்பூரில் நடப்பது இனக் கலவரம் தமிழகத்தில் நடப்பது சமுதாயப்பிரச்னை கார்த்தி எம்.பி., பேட்டி
மணிப்பூரில் நடப்பது இனக் கலவரம் தமிழகத்தில் நடப்பது சமுதாயப்பிரச்னை கார்த்தி எம்.பி., பேட்டி
ADDED : ஜன 02, 2025 12:50 AM
காரைக்குடி:மணிப்பூரில் நடப்பது இனக் கலவரம், தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சமுதாயப் பிரச்னை என சிவகங்கை எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: ஒரு அரசியல் கட்சி தலைவரும், சர்வீசில் உள்ள அதிகாரியும் வார்த்தைகளில் மோதிக் கொள்வது நல்லதல்ல. இப்பிரச்னையில் தலைமைச் செயலரோ டி.ஜி.பி.,யோ தலையிட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். இதை ஊக்குவிக்கக்கூடாது.
அண்ணா பல்கலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக புகார் அளித்ததை பாராட்டுகிறேன். காவல்துறை சார்பில் விசாரணை நடக்கிறது. நீதிமன்றம் விசாரணை குழு அமைத்துள்ளது. நடவடிக்கை ஏதுமில்லை என்றால் சி.பி.ஐ., நியமிக்கலாம். கைது செய்யப்பட்ட நபர் பல செயல்களில் குற்றம் சாட்டப்பட்டவராக உள்ளார். இப்படிப்பட்டவர் எப்படி இவ்வளவு நாள் வெளியே இருந்தார் என்பது தெரியவில்லை.
காவல்துறை என்ன செய்தது என்று தெரியவில்லை. தனிநபராக அவர் செய்தாரா. உடந்தையாக யாரும் உள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்த நபரின் நிலை இன்று என்னவென்று விசாரிக்க வேண்டும். மணிப்பூரில் நடப்பது இனக்கலவரம். அடிக்கடி இச்சம்பவம் நடைபெறுகிறது. இதுவரை பிரதமர் செல்லவில்லை. பிரதமர் மணிப்பூர் செல்லாததை நியாயப்படுத்த கூடாது. சனிப்பெயர்ச்சி வருகிறது. கடக ராசிக்கு சாட்டையடி கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும் என அண்ணாமலையிடம் ஜோசியர் சொல்லியிருக்கலாம்.
தமிழகத்தில் நடைபெறும் பாலியல் உள்ளிட்ட குற்றங்களை சமுதாயப் பிரச்னையாக தான் பார்க்க வேண்டும். அரசியலாக பார்க்கக்கூடாது. பிரதமர் மோடி, ஒரு காலத்தில் நிதி அமைச்சரின் வயதை டாலர் தாண்டிவிட்டது என்று கிண்டல் செய்தார். இன்று இருக்கும் டாலர் மதிப்பு இன்று உள்ள நிதியமைச்சரின் தாத்தா வயதை தாண்டிவிட்டது. பண மதிப்பிழப்பு செய்தது பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அடி. இரண்டாவது குழப்பமான ஜி.எஸ்.டி., கொரோனா பாதிப்பிற்கு பிறகு பொருளாதாரம் மீளவில்லை என்றார்.

