/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இறைவனின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்
/
இறைவனின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்
ADDED : ஏப் 26, 2025 05:34 AM
தேவகோட்டை : 'பசி என்று வந்தால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் உணவு வழங்கினால் இறைவனின் அருள் கிடைக்கும்,' என்று இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார்.
தேவகோட்டை பிரவசன கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் சீனிவாசன் பேசியதாவது:
உலகத்தில் கடவுள் உணவில்இருக்கிறார் எனகலியுக தர்மம் கூறுகிறது. கலியுகத்தில் எங்கும் எப்போதும் அன்னதானம் நடந்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் உணவை பிரித்து கொடுப்பதே உயர்ந்த தர்மம் என திருவள்ளுவரும், வயிற்றுக்கு சோறிட வேண்டும் என பாரதியும் கூறுகின்றனர்.
நாயன்மார்கள் அறுபத்து மூவரில் அன்னதானமே மிகவும் முக்கியமானதாக இருந்தது. சிவனடியார்களில் பெரும்பாலோர் உணவு கொடுப்பதைக் கடமையாகவே கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் இளையான்குடி மாற நாயனார். மிகவும் செல்வந்தரான அவர் அடியவர்களுக்கு அன்னம் வழங்கி வந்தார். காலப்போக்கில் வறுமை சூழ்ந்தாலும் அவரின் அன்னம் வழங்கும் பணி தொடர்ந்தது.
ஒரு கட்டத்தில் அவர்களுக்கே உணவு இல்லாதசூழல் உருவானது. ஒரு நாள் மாலை இருள் சூழ்ந்தது. நாயனாரும் அவரதுமனைவியும் உணவு எதுவும் இன்றி இறைவனின் திருநாமத்தை கூறியபடியே தண்ணீரை குடித்து விட்டு படுத்து விட்டனர்
சிறிது நேரத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்த போது மழையில் நனைந்தபடி ஒரு சிவனடியார் நின்றார். அவரை உள்ளே அழைத்து வேறு ஆடை கொடுத்து உபசரித்தனர். எல்லோருக்கும்உணவு வழங்குவதாக சொன்னார்கள். அதனால் தான் உங்கள் வீடு தேடி வந்ததாக அடியார் கூறினார். நாயனார் மனைவியை பார்த்தார். நாயனாரை வயலில் அன்று விதைத்த நெல்லை எடுத்து வரச் சொன்னார். நாயனார் மழையில் விதைத்த நெல்லை சல்லடையால் அரித்து வந்தார்.விறகும் இல்லை. வீட்டின் ஒரு பகுதியை பிரித்து எரித்து நெல்லை வறுத்து குத்தி அரிசியாக்கி சோறு வடித்தாள் அந்த தாய். கீரையை கடைந்து வைத்தார். அடியாரை உண்ண அழைத்தனர்.
வந்த அடியாரான இறைவன் காட்சி தந்து உணவு வழங்கிய உள்ளத்தை பாராட்டி அருள் மழை பொழிந்தார்.எந்த சூழ்நிலையிலும் அடியார்க்கும் உணவு வழங்கிட வேண்டும் என்பது தான் செய்தி.
கோயில்களில் அன்னதான திட்டம் வந்துள்ளது.விழாக்கள், பிறந்த நாள் என உணவு வழங்குவதை பார்க்க முடிகிறது. இருந்தாலும் இன்னும் கூட உணவின்றி இருப்போர் உள்ளனர். நம்மால் இயன்றவரை உணவு வழங்க வேண்டும். பசியில்லா உலகை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார்.

