/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
40 ஆண்டு கால போராட்டம் மானாமதுரை, இளையான்குடிக்கு விடிவு வருமா
/
40 ஆண்டு கால போராட்டம் மானாமதுரை, இளையான்குடிக்கு விடிவு வருமா
40 ஆண்டு கால போராட்டம் மானாமதுரை, இளையான்குடிக்கு விடிவு வருமா
40 ஆண்டு கால போராட்டம் மானாமதுரை, இளையான்குடிக்கு விடிவு வருமா
ADDED : மார் 21, 2024 02:04 AM

மானாமதுரை: சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட மானாமதுரை, இளையான்குடி தாலுகா பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
லோக்சபா தேர்தலோ,சட்டமன்றத் தேர்தலோ அறிவித்துவிட்டால் தி.மு.க.,அ.தி.மு.க.,மற்றும் முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களில் சுப்பன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும், மானாமதுரை சிப்காட் மேம்படுத்தப்படும், இளையான்குடியில் குண்டு மிளகாய் பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும், மானாமதுரையில் தரைப்பாலம் கட்டப்படும் என்ற வாக்குறுதி முக்கியமாக இடம் பெற்று வருகின்றன.ஆனால் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பெற்ற எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் இத்திட்டங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சுப்பன் கால்வாய் திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தரமான குண்டு மிளகாய் மற்றும் பருத்தி விளையும் பகுதியாகும். மானாமதுரை வைகை ஆற்றின் முக்கியத்துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பன் கால்வாய்த் திட்டம் உருவாக்கப்பட்டது.
உப்பாற்றில் கள்ளர்குளம் எனும் இடத்தில் அணை கட்டப்பட்டு கால்வாய் வெட்டப்பட்டு விட்டது. ஆனாலும் தண்ணீர் செய்களத்துார் பெரிய கண்மாய், சின்னக் கண்மாய், மஞ்சிக்குளம், கல்குறிச்சி ஆகிய நான்கு கண்மாய்களுடன் வைகை ஆற்றில் வீணாக கலக்கிறது. இத்திட்டம் முழுமை பெற்றால் 30 கண்மாய்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.
சுப்பன் கால்வாய் திட்டத்தின் மூலம் பாசனம் பெறும் கண்மாய்கள்.
1.செய்களத்துார் பெரிய கண்மாய் ,2.செய்களத்துார் சின்னக் கண்மாய், 3.மஞ்சிக்குளம் கண்மாய், 4.கல்குறிச்சி கண்மாய், 5.அரசகுழி கண்மாய், . 6.அரசனேந்தல் கண்மாய், 7.வடக்குச் சந்தனுார் கண்மாய், 8.என்.புக்குளி கண்மாய், 9. எஸ்.காரைக்குடி கண்மாய், 10.புத்தனேந்தல் கண்மாய் 11.அரியனுார் கண்மாய், 12.மருதங்கநல்லுார் கண்மாய், 13.மருதங்கநல்லுார் புதுக்கண்மாய், 14.தேவரேந்தல் கண்மாய், 15.செட்டியேந்தல் கண்மாய், 16. கோவானுார் கண்மாய், 17.தச்சனேந்தல் கண்மாய், 18.காக்குடி கண்மாய், 19எழுநுாற்றி மங்கலம் கண்மாய், 20.எல்.மணக்குடி கண்மாய், 21.பிடாரனேந்தல் கண்மாய், 22.அகரேந்தல் கண்மாய், 23.திருவேங்கடம் கண்மாய், 24.முள்ளுசேரி கண்மாய், 25.கருவத்தி கண்மாய், 26.நாகமுகுந்தன்குடி கண்மாய், 28.திருவள்ளூர் பெரிய கண்மாய், 29.விளாங்குளம் கண்மாய், 30.கண்ணமங்கலம் கண்மாய், 31.சாத்தனி ஆகிய கண்மாய்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராம முருகன் கூறுகையில், தேர்தல் காலங்களில் மட்டும் சுப்பன் கால்வாய் துார்வாரப்பட்டு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகளில் தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மக்களை எப்படி கண்டு கொள்ளாமல் இருக்கின்றனரோ அதேபோன்று இத்திட்டத்தையும் மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் வைகை ஆற்றிலும் அதன் துணை ஆறான உப்பாற்றிலும் வருடம்தோறும் பருவ மழை காலங்களில் தண்ணீர் வந்தாலும் வறண்டு கிடக்கும் இளையான்குடி மற்றும் சாலைக்கிராமம் பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி குண்டு மிளகாய்
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட சாலைக்கிராமம் இளையான்குடி,சூராணம், முனைவென்றி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளிலும் குண்டு மிளகாய் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் குண்டு மிளகாய்க்கென்று தனி மவுசு உள்ளதாலும் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாலும் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் குண்டு மிளகாய் அறுவடை காலங்களில் இதனை பாதுகாத்து வைக்கக்கூடிய குளிர்பதன குடோன்கள் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் குறைந்த விலைக்கு குண்டு மிளகாய்களை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படும் நிலைக்கு நீண்ட காலமாக தள்ளப்பட்டு வருகின்றனர். ஆகவே இப்பகுதியில் குண்டு மிளகாய்களை பாதுகாக்க குளிர் பதன குடோன் அமைக்க வேண்டுமென நீண்ட வருடங்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி தெற்கு கீரனுார் தங்கபாண்டி கூறுகையில்,
இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதிகளில் விளைவிக்கப்படும் குண்டு மிளகாய்க்கு காரம் அதிகமாக இருப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் குண்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப்படுகிற நிலையில் இதனை பாதுகாக்க குளிர்பதன குடோன் அமைக்க வேண்டுமென நீண்ட வருடங்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் குண்டு மிளகாய் விவசாயம் செய்து வரும் நிலையில் அவர்களை பாதுகாக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக இளையான்குடி பகுதியில் குளிர் பதன குடோன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகம்
சிவகங்கை மாவட்டத்தில் தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய பகுதியான மானாமதுரை பகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட சில வருடங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவானதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. கடந்த 20 வருடங்களாக துவங்கப்பட்ட தொழிற்சாலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடு விழாவை நோக்கி சென்றதை தொடர்ந்து தற்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையை இழந்து பரிதவித்து வருகின்றனர்.மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1800 கோடி முதலீட்டில் துவங்கப்பட்ட வீடியோகான் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் மூடப்பட்டு விட்டது. தற்போது சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பெரிய அளவிலான எவ்வித தொழிற்சாலையும் இல்லாத காரணத்தினால் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
மானாமதுரை தரைப்பாலம்
மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்படும் என அனைத்து கட்சியினரும் நீண்ட காலமாக வாக்குறுதி அளித்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு தேர்தலும் முடிந்து அடுத்த தேர்தலும் வரும் நிலையில் மானாமதுரையில் தரைப்பாலம் அமைப்பதற்கான பணிகள் மட்டும் துவங்கப்படவே இல்லை. மானாமதுரையில் கன்னார் தெரு, கிருஷ்ணராஜபுரம் இடையே தரைப்பாலம் அமைக்கப்பட்டால் மக்கள் விரைவாகவும், வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் நேரங்களிலும் எவ்வித சிரமம் இன்றி வைகை ஆற்றை கடந்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் சோமசுந்தர பாரதி கூறுகையில், மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மானாமதுரை மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ள தரைப்பாலம் அமைக்க வேண்டி 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் கட்சியினர் மானாமதுரையில் தரைப்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கின்றனர்.ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தரைப்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது கிடையாது. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தார்.

