/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் மக்களின் தாகம் தீர்க்குமா.. எதிர்பார்ப்பு! ரூ 21.67 கோடியிலான புதிய குடிநீர் திட்டம்
/
திருப்புத்துார் மக்களின் தாகம் தீர்க்குமா.. எதிர்பார்ப்பு! ரூ 21.67 கோடியிலான புதிய குடிநீர் திட்டம்
திருப்புத்துார் மக்களின் தாகம் தீர்க்குமா.. எதிர்பார்ப்பு! ரூ 21.67 கோடியிலான புதிய குடிநீர் திட்டம்
திருப்புத்துார் மக்களின் தாகம் தீர்க்குமா.. எதிர்பார்ப்பு! ரூ 21.67 கோடியிலான புதிய குடிநீர் திட்டம்
ADDED : மார் 27, 2024 06:59 AM
திருப்புத்தூர் : திருப்புத்துார் பேரூராட்சியில் நடந்து வரும் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.21.67 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் முழுமையான பலனைத் தர சரியான கண்காணிப்புடன் நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இல்லாவிட்டால் பழைய திட்டங்களை போன்று முழுமையான பலனைத் தராமல் திட்டநிதி வீணாகி விடும்.
திருப்புத்துார் பேரூராட்சியில் கடந்த 1971 ல் குடிநீர் திட்டம் எல்.ஐ.சி.,கடன் ரூ 40 லட்சம் நிதியில் நிறைவேற்றப்பட்டது. மணிமுத்தாறு படுகையில் உறிஞ்சு கிணறு மூலம் வடிவமைக்கபட்ட இத்திட்டம் மூலம் 2 ஆயிரம் இணைப்புகள் இலக்காக கொண்டு உருவானது. தொழில்நுட்ப ரீதியாக நன்றாக செயல்பட்ட இத்திட்டத்திற்கு நீராதாரம் போதிய அளவில் இல்லாததால் மாற்றுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் எம்.பி., தொகுதி நிதியின் கீழ் தொட்டிகள் நகரில் பரவலாக கட்டப்பட்டு இன்று வரை பல இடங்களில் மக்களின் தண்ணீர் தேவையை போக்குகிறது. சில ஆண்டுகள் மத்திய அரசின் 'வார் பார் வாட்டர்' திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்தது.
பிரமாண்ட திட்டமாக காவிரிக்கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 2009 ல் ரூ 16 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டது. அதில் தற்போது 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடக்கிறது. கோடை வெப்பத்தால் நீர் பற்றாக்குறையால் நான்கு நாட்களுக்கு ஒரு முறையாக மாறி விட்டது. இந்தத் திட்டத்திலும் 2 ஆயிரம் இலக்கை அடையவில்லை. இதனால் பொதுமக்கள் முழுமையாக குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க பேரூராட்சி சார்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 21.67 கோடியில் புதிய திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதில் தம்பிபட்டியில் 1.5 லட்சம் லி,, தென்மாப்பட்டில் 2 லட்சம் லி., கொள்ளளவில் மேல்நிலைத்தொட்டிகள், புதுப்பட்டியில் ஒரு லட்சம் லி., கொள்ளளவில் தரைமட்டத்தொட்டி கட்டப்படுகிறது. உள்ளூர் குடிநீர் ஆதாரத்திற்காக 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறும் போடப்படுகிறது. குடிநீர் விநியோகத்திற்கு நகர் முழுவதும் 77.64 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
2025 மே மாதத்தில் திட்டப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 4682 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொதுவாக திருப்புத்துாருக்கான பல குடிநீர் திட்டங்கள் பல கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டாலும் உண்மையான பலனைத் தந்தது, கருவேல்குரிச்சி குடிநீர் திட்டமும், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டமுமே.
பல கோடி மதிப்பிலான பக்கத்து ஊர்களிலிருந்து ஆழ்குழாய் கிணறுகள் மூலம் ரூ 1.5 கோடியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டம், ஓ.சிறுவயலிலிருந்து குடிநீர் கொண்டு வர ரூ 4 கோடி மதிப்பில் நிறைவேறிய குடிநீர் திட்டம் நிதி செலவழிக்கப்பட்டும் மக்களுக்கு பலனைத் தராமல் போய் விட்டது.
இதனால் புதிய திட்டத்திற்கான பணிகள் சரியான கண்காணிப்புடன் நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் தொழில்நுட்பக் குறைகளால் வழக்கம் போல் தினசரி குடிநீர் விநியோகமும், மேடான பகுதிகளில் குடிநீர் ஏற்றமும் வெறும் 'கனவாகி' விடும்.

