/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பில்லாத பார்த்திபனுார் மதகு அணை நீர் நிலைகளுக்கு முறையாக தண்ணீர் வருமா
/
பராமரிப்பில்லாத பார்த்திபனுார் மதகு அணை நீர் நிலைகளுக்கு முறையாக தண்ணீர் வருமா
பராமரிப்பில்லாத பார்த்திபனுார் மதகு அணை நீர் நிலைகளுக்கு முறையாக தண்ணீர் வருமா
பராமரிப்பில்லாத பார்த்திபனுார் மதகு அணை நீர் நிலைகளுக்கு முறையாக தண்ணீர் வருமா
ADDED : செப் 30, 2025 04:15 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பார்த்திபனுார் மதகு அணை போதிய பராமரிப்பு இல்லாமல் கருவேல மரங்கள் வளர்ந்தும், அங்குள்ள அறைகள் பாராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை அருகே வேதியரேந்தல் பகுதியில் பார்த்திபனுார் மதகு அணை 1974ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணையிலுள்ள வலது பிரதான கால்வாய் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,267 ஏக்கர் விவசாய நிலங்கள் 154 கண்மாய்கள் மூலம் பயன் பெற்று வருகின்றன. இடது பிரதான கால்வாய் மூலம் சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 35,385 ஏக்கர் விவசாய நிலங்கள் சிவகங்கை மாவட்டத்தில் 39 கண்மாய்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 கண்மாய்கள் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது மதுரை அருகே உள்ள விரகனுார் மதகு அணை, பார்த்திபனுார் மதகு அணைகளின் மூலம் மதுரை,சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்படும்.
மானாமதுரை அருகே உள்ள பார்த்திபனுார் மதகு அணை கடந்த சில மாதங்களாக போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அணையை ஒட்டியுள்ள பிரதான கால்வாய் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் கருவேல மரங்கள், நாணல் வளர்ந்துள்ளதால் தண்ணீர் திறந்து விடும்போது கண்மாய்களுக்கு சீராக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே உள்ள அறைகளில் மது குடிப்பவர்கள் காலி பாட்டில்களை உடைத்து வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: வைகை அணையில் இருந்து தற்போது பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை பாசன பகுதிக்கு வைகையில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகிறோம். விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் பார்த்திபனூர் மதகு அணையை பராமரிக்காததால் தண்ணீர் வரும்போது கண்மாய்களுக்கு சீராக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை நீர்வள அதிகாரிகள் உடனடியாக பார்த்திபனூர் மதகணையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.