UPDATED : நவ 19, 2026 06:24 PM
ADDED : நவ 19, 2026 06:22 PM

காரைக்குடி: காரைக்குடி செஞ்சையில் இருந்து சங்கன்திடல் செல்லும் தேனாற்றில் பாலம் அமைத்து தர 20 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சியின் பழமையான பகுதியாக செஞ்சை மற்றும் சங்கன்திடல் உள்ளது. சங்கன்திடலில் விவசாயம் அதிகம் நடந்து வருகிறது. விவசாய வேலைக்காகவும் வெளியூர் செல்வதற்கும் செஞ்சை மக்கள் சங்கன்திடல் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செஞ்சை சங்கன்திடல் சாலையின் நடுவே தேனாறு உள்ளது. மழைக்காலங்களில் தேனாற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் இவ்வழியை பயன்படுத்த முடியாமல் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. செஞ்சை சங்கன்திடல் இணைப்புப் பாலம் கட்டுவதற்கு விவசாயிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை பாலம் கட்டப்படவில்லை. சங்கன்திடல் செஞ்சை இணைப்பு பாலம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்;
செஞ்சை பகுதி மக்கள் விவசாயத்திற்காகவும், கோயில்களுக்கு செல்லவும் சங்கன்திடல் செல்கின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் மஞ்சுவிரட்டு மற்றும் திருவிழாவிற்கு செஞ்சை மக்கள் சங்கன்திடல் சாலையை பயன்படுத்துகின்றனர். அய்யனார் சன்னதி தெரு அருகே வரத்து கால்வாயில் தண்ணீர் வரும்போது பொதுமக்கள் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அய்யனார் சன்னதி தெரு சங்கன்திடல் சாலையை இணைத்திடும் வகையில் பாலம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
