/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அவலம் மதுபான கழிவின் கோடவுனாக மாறிய திருப்புத்துார் சீதளிக்குளம் சீரமைக்கப்படுமா
/
அவலம் மதுபான கழிவின் கோடவுனாக மாறிய திருப்புத்துார் சீதளிக்குளம் சீரமைக்கப்படுமா
அவலம் மதுபான கழிவின் கோடவுனாக மாறிய திருப்புத்துார் சீதளிக்குளம் சீரமைக்கப்படுமா
அவலம் மதுபான கழிவின் கோடவுனாக மாறிய திருப்புத்துார் சீதளிக்குளம் சீரமைக்கப்படுமா
ADDED : மார் 12, 2024 11:42 PM

திருப்புத்துார்: திருப்புத்துார் சீதளிக்குளத்தை சுகாதாரக் கேட்டிலிருந்து பாதுகாக்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
' கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் ' என்பார்கள். கோயிலின் முக்கியமான அம்சங்களாக மூர்த்தி,தலவிருட்சம், தீர்த்தம் உள்ளன. அதில் தீர்த்தமான கோயில் சார்ந்த குளம் தான் ஊரின் மழைநீரை சேகரித்து, பொதுப்புழக்கத்திற்கான நீர்த்தேவையை சமாளிக்க முன்னோர்களுக்கு உதவியது. ஆனால் குடி மராமத்து மறைந்தவுடன் நீர்நிலைகளின் பராமரிப்பு பாதித்து அழியத்துவங்கியது. அதில் சீதளி தெப்பக்குளம் தன்னை பாதுகாக்க போராடி வருகிறது.
திருத்தளிநாதர் கோயில் தெப்பக்குளமான சீதளி தெப்பக்குளம் பார்க்க ரம்யமானது. நீரை சேமித்து வைக்கும் செம்புரான் கற்களால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், 12 படித்துறைகள், வரிசையான படிக்கட்டு, 10 ஏக்கர் பரப்பளவில் நீள் சதுர வடிவில் பரந்து காணப்படுகிறது. நகரின் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது.
கோபுரத்தின் அஸ்திவாரத்தை பாதுகாக்கவும், அப்பகுதியில் மழை நீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மையில் நம் முன்னோர்களின் அனுபவத்திற்கு அடையாளமாக உள்ளது. நகரின் நூற்றுக்கணக்கானோர், காலை முதல் மாலை வரை குளிக்கவும், நீச்சல் பழகவும் பயன்பட்டது. தற்போது இது குறைந்து விட்டது. விழாக்காலங்களில் தெப்பம் வலம் வந்தது. இரு முறை சுற்றுச்சுவர் சரிந்து அரசு நிதியால் பராமரிக்கப்பட்டது.
தற்போது இக்குளம் முறையான, தொடர் பராமரிப்பின்றி, சமூக விரோதிகளின் நடவடிக்கையாலும் சுகாதாரக்கேடாகி மாறி வருகிறது. குளத்தின் வடக்கு வாயில் பகுதி மதுபானக் கடையிலிருந்து வந்து மது அருந்தும் இடமாக மாறி விட்டது. கோயில் குளக்கரை மற்றும் கோயில் சுவரை ஒட்டி மது குடிக்க பயன்படுத்திய பாலீதின் பைகள், கப் நிறைந்து காணப்படுகிறது. பெண்கள் படித்துறையில் ஆண்கள் மது அருந்துவதை பார்க்க முடிகிறது. அப்பகுதியில் பெண்கள் நடமாட்டம் அரிதாகி விட்டது. இது போதாதென்று குளக்கரை அருகிலேயே வளர்ந்த சீமைக்கருவை மரங்கள் , புதர்களில் மனிதர்கள் மலம் கழிக்கும் இடமாகி விட்டது.
12 ஆண்டுகளுக்கு முன் ரூ 2 கோடியில் புனரமைக்கப்பட்ட போது போடப்பட்ட டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை கற்கள் பெயர்ந்து மண்ணாகி விட்டது. தெப்ப மண்டபம் அருகில் தண்ணீர் தொட்டியிலிருந்து பெருகும் கழிவுநீர் தேக்கம், காலி மதுபான பாட்டில் சேகரிப்பு மையம், சுத்தம் செய்யப்படாத படித்துறைகள் என்று தன் அழகை, சுகாதாரத்தை இழந்து நிற்கிறது சீதளிக்குளம்.
அரசு இக்குளத்தையும், சுற்றிலுமுள்ள பகுதியை சீரமைக்கவும், பூங்கா,நடைபாதை, கழிப்பறை போன்ற வசதிகளை ஏற்படுத்தவும் நிதியுதவி செய்ய வேண்டியது அவசியமாகும். குளத்தைச் சுற்றிலும் கோயில் நிலத்தை சுற்றி வேலி அமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான இடங்களில் மட்டும் நுழைவாயில் அமைத்தும், பெரியகண்மாயிலிருந்து வரத்துக்கால்வாய்களை நவீனப்படுத்தி சீரமைக்க வேண்டியதும் அவசியமாகும்.

