ADDED : நவ 22, 2024 04:15 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே வாணியங்குடியில் பெண் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மாவட்டம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினசரி காய்ச்சல் பாதித்து 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் வாணியங்குடியை சேர்ந்த 26 வயது பெண் டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 4 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சையில் உள்ளார். இதேபோல் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் வருகை அதிகமாக உள்ளது. சிறப்பு முகாம் மூலம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளிலும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்ட வேண்டும்.
மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகையில், மழைக்காலம் என்பதால் சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. காய்ச்சல் பாதித்த பகுதிகளை கண்டறிந்து உடனுக்குடன் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். கொசு ஒழிப்புப் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறோம்.
பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தாங்கள் இருக்கும் பகுதியை துாய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றனர்.