UPDATED : நவ 18, 2026 06:42 PM
ADDED : நவ 18, 2026 06:42 PM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே சிலுக்கப்பட்டி கிராமத்தில் தண்ணீர் ஓடையில் கூலி தொழிலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடன் மது அருந்திய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சூராணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்கென்னடி 60. கூலி தொழிலாளியான இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் திருமணமாகி வசித்து வருகின்றனர். ஜான்கென்னடி நவ.16 ல் காளையார்கோவில் அருகே உள்ள சிலுக்கப்பட்டி கிராமத்தில் தண்ணீர் செல்லும் ஓடையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். காளையார்கோவில் போலீசார் விசாரணையில் ஜான்கென்னடியுடன் அவரது நண்பர் சூராணம் கமலக்கண்ணன் 48 ,மது அருந்தியது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் காதர்மீரா தலைமையிலான போலீசார் கமலக்கண்ணனை பிடித்து விசாரிக்கையில் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இருவரும் மது அருந்தும்போது போதையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில் ஜான்கென்னடி கமலக்கண்ணனை திட்டி அடித்துள்ளார். ஆத்திரத்தில் ஜான்கென்னடியை ,கமலக்கண்ணன் கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
