/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்கம்
/
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்கம்
ADDED : ஏப் 16, 2025 08:40 AM
சிவகங்கை, : உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மாவட்டத்தில் பரவலாக உளுந்து சாகுபடி செய்துள்ளனர். அவ்வப்போது பெய்யும் கோடை மழையினால் பயிர்கள் வளர்ச்சி பெற்று வருகிறது. இங்கு வம்பன் 8 மற்றும் 10 ஆகிய ரகங்கள் அதிகளவில் விளைகின்றன. தற்போது உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இச்சாறு உறிஞ்சும் பூச்சி நோய் பரப்புவதன் மூலம் 80 முதல் 85 சதவீத மகசூல் பாதிக்கப்படும்.
இந்நோய் இலை, காய்களில் எளிதில் பரவிவிடும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள வம்பன் 10 மற்றும் 11 ரகங்களை விவசாயிகள் விதைக்கலாம். மே மாதத்தில் அதிக வெப்ப நிலை நிலவும் இடங்களில் உளுந்து பயிரிடுவதை தவிர்க்கவும். சரியான இடைவெளியில் விதைக்க வேண்டும். இதற்கு ஊடுபயிராக வரப்பு மற்றும் ஊடுபயிராக 2 வரிசை சோளம், கம்பு விதைக்க வேண்டும்.
அதிகளவில் தழைச்சத்து இடக்கூடாது. வெள்ளை ஈ நடமாட்டம் உள்ளதாக என அடிக்கடி கண்காணிக்கவும். மஞ்சள் தேமல் நோய் பாதிக்கப்பட்டால், அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு மருந்து தெளிப்பதற்கான ஆலோசனைகளை பெறலாம் என்றார்.

