/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசி தொகுதி நிரந்தர பிரச்னைகளை தீர்த்து வைப்பார்களா வேட்பாளர்கள் வணிகர்கள் சங்கம் கேள்வி
/
தென்காசி தொகுதி நிரந்தர பிரச்னைகளை தீர்த்து வைப்பார்களா வேட்பாளர்கள் வணிகர்கள் சங்கம் கேள்வி
தென்காசி தொகுதி நிரந்தர பிரச்னைகளை தீர்த்து வைப்பார்களா வேட்பாளர்கள் வணிகர்கள் சங்கம் கேள்வி
தென்காசி தொகுதி நிரந்தர பிரச்னைகளை தீர்த்து வைப்பார்களா வேட்பாளர்கள் வணிகர்கள் சங்கம் கேள்வி
ADDED : ஏப் 06, 2024 01:14 AM
தென்காசி:தென்காசி லோக்சபா தொகுதியில் வணிகர்களின் அடிப்படை பிரச்னைகளையே தீர்க்க முடியவில்லை. இந்நிலையில் இங்குள்ள நிரந்தர பிரச்னைகளை தீர்ப்பாளர்களா போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் என வணிகர்கள் சங்க செயலாளர் சந்திரமதி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தென்காசியில் வணிகர்களுக்கு வணிகவரித்துறை சார்ந்த பிரச்னைகள் உள்ளன. பில்லில் சிறு புள்ளி, கோடு சரியாக விழவில்லை என்றாலும் அதை சரிசெய்து வாருங்கள் என துறை அதிகாரிகள் வணிகர்களை அலைக்கழிக்கின்றனர்.
கொள்முதல் ரூ.50 ஆயிரம் என்றால் விதிக்கும் அபராதம் அதைவிட மூன்று மடங்காக உள்ளது.
தேர்தல் பறக்கும் படையினரால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாவது முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
அதற்காக பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்கின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என இருந்த சட்டத்தையே பயன்படுத்தி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள்.
இன்றைக்கு விலைவாசி எந்தளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட ரூ.50 ஆயிரம் போதாது.
பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெற கருவூல அலுவலகம் சென்றால் பல காரணங்களை கூறி விரட்டுகின்றனர். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் ரதவீதியில் 40 ஆண்டுகளாக ஒரு வழிப்பாதை இல்லை. தற்போது வணிக சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் நடைமுறைபடுத்தியுள்ளனர்.
இப்பாதையில் இருசக்கர வாகனங்களை அனுமதிப்பதில்லை. இதனால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர், எஸ்.பி.,யிடம் மனு அளித்தும் பயன் இல்லை.
தென்காசியில் நீண்ட கால பிரச்னைகளாக குடிநீர், வீணாகும் குற்றாலம் நீரை சேமிக்க அணைக்கட்டு கட்டுவது, தொழிற்சாலை துவங்குவது உள்ளன. தேர்தல் வரும் போது ஓட்டுக்காக ஒவ்வொரு கட்சியினரும் அணை கட்டுவோம் என வார்த்தைகளால் மட்டுமே அணை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அதை நடைமுறைப்படுத்த யாரும் முன்வருவதில்லை. வியாபாரமும், விவசாயமும் செழிப்படைய எந்த எம்.பி.,யும், எம்.எல்.ஏ.,வும் இதுவரை முயற்சி செய்யவில்லை.
மாநில அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மானிய கடன் யாருக்கும் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரியால் வணிகர்கள் துன்பப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க வேட்பாளர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் பேசி தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.

