ADDED : ஜூலை 26, 2024 11:46 PM
தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதுடன் நான்கு பேரை சரமாரியாக தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஷ், யோகேஸ்வரன், சூர்யா இளங்கோ ஆகியோர் காரில் குற்றாலம் சென்றிருந்தனர். ராமேஸ்வரத்திற்கு திரும்பும் வழியில் சங்கரன்கோவில் நேற்று முன் தினம் இரவு சென்றனர். அங்குள்ள ஓட்டலில் சாப்பிட காரை ரோட்டின் ஓரம் நிறுத்திய போது அதற்கு முன் அங்கு நிறுத்திருந்த கார் உரிமையாளருக்கும் இவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தி.மு.க., லாலா சங்கர பாண்டியன் அங்கு வந்துள்ளார். அவர் காரில் இருந்தவர்களை தட்டி கேட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராமேஸ்வரம் விக்னேஷின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. விக்னேஷ் உட்பட நான்கு பேர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடந்தது. சம்பவம் குறித்து இருதரப்பிலும் புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.