/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தனியார் பஸ்கள் மோதியதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி
/
தனியார் பஸ்கள் மோதியதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி
தனியார் பஸ்கள் மோதியதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி
தனியார் பஸ்கள் மோதியதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி
ADDED : நவ 25, 2025 03:36 AM

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியானார்கள்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக தென்காசிக்கு கே.எஸ்.ஆர்., தனியார் பஸ் சென்றது. நெற்கட்டும் செவலை சேர்ந்த முத்துச்செல்வன் 33, ஓட்டினார்
தென்காசியிலிருந்து கடையநல்லூர் வழியே கோவில்பட்டிக்கு எம்.ஆர். கோபாலன் நிறுவன பஸ் சென்றது. ராஜபாளையம் அருகே முறம்புவை சேர்ந்த கலைச்செல்வன் 32 ஓட்டினார்.
கடையநல்லூர் அருகே இடைகால் மெயின் ரோட்டில் கே.எஸ் ஆர். பஸ் முன்னால் சென்ற அரசு பஸ்ஸை முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த எம்.ஆர்.கோபாலன் பஸ் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் இரண்டு பஸ்களில் முன்புறமும் நொறுங்கின. இரு பஸ்களிலும் இருந்த 70-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.
சம்பவ இடத்தில் புளியங்குடியை சேர்ந்த வனராஜ் 67, அவரது மனைவி சண்முகத்தாய் 60, கடையநல்லூர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி 55, புளியங்குடி மல்லிகா 55, தென்காசி வருவாய் துறை ஊழியர் கற்பகவல்லி 30, சொக்கலிங்கபுரம் முத்துலட்சுமி 50, கடையநல்லூர் சுப்புலட்சுமி 52 என 7 பேர் பலியானார்கள்.
60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 7பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும், இரு பஸ்களின் டிரைவர்கள் உட்பட 50 பேர் தென்காசி அரசு மருத்துவமனையிலும் 10 பேர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் கலெக்டர் கமல் கிஷோர், எஸ்.பி.அரவிந்தன் மற்றும் உயர் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விபத்துக்கு காரணமாக கே.எஸ். ஆர் பஸ்சின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி - கடையநல்லூர் சாலையில் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. சமீபகாலமாக விபத்துகள் குறைந்து இருந்த நிலையில் மீண்டும் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.
நிதி உதவி இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய்; படுகாயம் அடைந்துள்ளோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்; லேசான காயம் அடைந்துள்ளோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

