/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு... புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
/
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு... புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு... புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு... புவியியல் வல்லுனர்கள் விளக்கம்
ADDED : செப் 24, 2024 08:01 PM
'நிலப்பரப்பிற்கு கீழ் பகுதியில் வறண்ட நிலை ஏற்பட்டதால், நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம்' என, புவியியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலை, மலையோர பகுதிகளான மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி, சிவந்திபுரம், அகஸ்தியர்பட்டி, மன்னார்கோவில், பிரம்மதேசம் பகுதிகளில் நேற்று முன்தினம் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இதுபோல தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், ஆவுடையானுார், திப்பனம்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கடையம், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் லேசான நில அதிர்வு தென்பட்டது.
நில அதிர்வு, ௪ முதல் ௬ விநாடிகள் வரை உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். இதனால் ஒரு சில இடங்களில் உள்ள வீடுகளில் பாத்திரங்கள் விழுந்தன. நில அதிர்வு குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
'நில அதிர்வு குறித்த எந்த தகவலும் நில நடுக்கத்தை உணரும் கருவிகளில் பதிவாகவில்லை. மக்கள் பீதியடைய வேண்டாம். அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருகின்றனர்' என, திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன், தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்தனர்.
வல்லுனர்கள் விளக்கம்
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடந்த நில அதிர்வு குறித்து புவியியல் வல்லுனர்கள் கூறியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள், புவியின் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. புவிக்கு அடியில், தட்பவெப்பத்தை பொருத்து, அவ்வப்போது சில மாற்றங்கள் ஏற்படும். புவிக்கு அடியில் வறண்ட நிலை ஏற்பட்டிருக்கலாம்.
இவ்வாறு வறண்ட நிலை ஏற்படும் போது, அப்பகுதியில் உள்ள காற்று வெளிப்படும். இவ்வாறு காற்று வெளிப்படும் போது, புவியின் நிலப்பரப்பு லேசாக அதிரும். இது நில நடுக்கத்தை அறியும் கருவிகளில் பதிவாகாது.
அது போல தான் நேற்று முன்தினம் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். இதுகுறித்து புவியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். திருநெல்வேலி, தென்காசியில் ஏற்பட்ட நில அதிர்வு மைக்ரோ அளவிலான நில அதிர்வு தான்.
இவ்வாறு புவியியல் வல்லுனர்கள் கூறினர்.
-நமது சிறப்பு நிருபர்-