/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசி கனிம அதிகாரி 'நகர' மறுத்து பிடிவாதம்
/
தென்காசி கனிம அதிகாரி 'நகர' மறுத்து பிடிவாதம்
ADDED : டிச 11, 2024 02:32 AM

தென்காசி:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகளவில் கனிமம் தோண்டி எடுக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில், அண்மையில் வேறு மாவட்ட சுரங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், பாவூர்சத்திரம், குலசேகரபட்டியில் ஒரு கல்குவாரி அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, தடை விதிக்கப்பட்டது. போலி பாஸ்களுடன் சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனால் தென்காசி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் வினோத், நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட உதவி இயக்குனரான ஈஸ்வரன் தென்காசிக்கு மாற்றப்பட்டார்.
நேற்று முன்தினம் இருவரும் அந்தந்த மாவட்டங்களில் பணி பொறுப்பேற்கும் படி, சுரங்கத்துறை கமிஷனர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டிருந்தார். ஆனால், வினோத், தென்காசியை விட்டு செல்ல மறுத்துள்ளார். இதனால் ஈஸ்வரன் பொறுப்பேற்க முடியாமல் தவித்தார்.
நேற்று கனிமவளத்துறை நடை ஏற்றிச் செல்லும் அனுமதிச்சீட்டு வழங்காமல், மற்றொரு நாள் வரும்படி வினோத் தெரிவித்து உள்ளார். திருநெல்வேலி மாவட்டம், அடை மிதிப்பான்குளம் கல்குவாரியில் 2022 மே 14ல் நான்கு தொழிலாளர்கள் இறந்த போது திருநெல்வேலி மாவட்ட உதவி இயக்குனராக வினோத் தான் பணியாற்றினார்.
அப்போது வட மாவட்டத்திற்கு மாற்றப்பட்டவர் மீண்டும் தென்காசிக்கு பணி மாறுதல் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.