/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
'சிட்டிஸ் 2.0' திட்டம்: மதுரை, தஞ்சை தேர்வு
/
'சிட்டிஸ் 2.0' திட்டம்: மதுரை, தஞ்சை தேர்வு
ADDED : மார் 07, 2025 07:08 AM

தஞ்சாவூர் : திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த மாநகராட்சிகளாக, 'சிட்டிஸ் 2.0' திட்டத்தில் தஞ்சாவூர், மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சாவூர் மேயர் ராமநாதன் நேற்று கூறியதாவது: 'சிட்டிஸ் 2.0' எனும் திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில், 2024 ஜன., 15ம் தேதி முன்மொழிவு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில், முதல் சுற்றில் 84 மாநகராட்சிகள் பங்கு பெற்றன. இவற்றின் திட்ட வரைவுகளை வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம் அமைத்த வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து, இரண்டாம் சுற்றுக்கு 36 நகரங்களை தேர்வு செய்தது.
இறுதியாக, இந்திய அளவில் 18 மாநகராட்சிகள் தேர்வாகின. இதில், தஞ்சாவூர் தேர்வானது. தொடர்ந்து, சிட்டிஸ் 2.0 திட்டத்தின் கீழ், 165 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் உள்ள குப்பை, உயிரியல் முனையம் வாயிலாக முற்றிலும் அகற்றப்பட உள்ளது. குப்பையை சேகரிக்க புதிதாக 200க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள், நவீன இயந்திரங்கள் வாங்க உள்ளோம்.
புதிதாக இணையப்பட உள்ள பஞ்சாயத்துகளிலும், நுண்ணுர செயலாக்க மையம் துவக்கப்படவுள்ளது. 2026ம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், தஞ்சை மாநகரம் துாய்மை மாநகரமாக உதயமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து மதுரை மாநகராட்சியும் தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.