/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் 3 மணி நேரம் பாதிப்பு
/
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் 3 மணி நேரம் பாதிப்பு
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் 3 மணி நேரம் பாதிப்பு
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் 3 மணி நேரம் பாதிப்பு
ADDED : ஏப் 23, 2024 10:34 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில் சித்திரை திருவிழா, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள, தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
இந்த தேர் அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடையும் கொண்டது. திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்ததாக தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகும்.
இந்நிலையில், சாரங்கபாணி கோவில் தெற்கு வீதியில், தேர் நேற்று காலை 10:00 மணிக்கு, சாலையில் இருந்த குடிநீர் தொட்டிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனால் தேர் தெற்கு புறமாக சாய துவங்கிய நிலையில், தேரோட்டுபவர்கள் கிரேன், ஜாக்கி போன்ற இயந்திரங்களால் சக்கரத்தை துாக்க முயன்றனர்; முடியவில்லை.
பின், மாநகராட்சி சார்பில், பள்ளத்தில் கருங்கல் ஜல்லிகளை நிரப்பி, சக்கரத்தை மீட்டனர். பிறகு, மணல், கற்கள் மீது இரும்பு பலகை போடப்பட்டு, மூன்று மணி நேரத்திற்கு பிறகு தேர் புறப்பட்டது.
பக்தர்கள் கூறியதாவது:
தேரோடும் வீதியில் குடிநீர் உந்து சக்திக்கான வால்வு சில நாட்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டது. அதை மாநகராட்சி பணியாளர்கள் சீர் செய்த நிலையில், முறையாக மூடாமல் வெறும் மண்ணால் நிரப்பினர். இதன் மீது தார் ஊற்றியதால் நீரின் கசிவு ஏற்பட்டதால், தேரின் பாரம் தாங்காமல் பள்ளம் ஏற்பட்டு சக்கரம் சிக்கியது.
இவ்வாறு தெரிவித்தனர்.

