/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
இளைஞரை கொன்ற நண்பர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை
/
இளைஞரை கொன்ற நண்பர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : மார் 22, 2024 01:37 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆவணியாபுரத்தை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம். இவரது கணவர் சாகுல் அமீது, வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவர்களின் மகன் முன்தஸீர், இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்தார்.
கடந்த 2019 ஜனவரி 4ம் தேதி மாலை முன்தஸீர் குறிச்சி மலையில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு சென்றார். இரவு 7:00 மணிக்கு முன்தஸீர் மொபைலில் இருந்து மும்தாஜ் பேகத்திற்கு அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர்கள், முன்தஸீரை கோயம்புத்துாருக்கு கடத்தி செல்வதாகவும், 5 லட்சம் ரூபாயை கொடுத்து அவரை அழைத்து செல்லுமாறும் கூறி, இணைப்பை துண்டித்தனர். திருவிடைமருதுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தேடினர்.மறுநாள் திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையில் முன்தஸீர் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது:
முன்தஸீர், இஜாஸ் அகமது இருவரும் பள்ளி பருவ நண்பர்கள்.
இஜாஸ் அகமது கல்லுாரி மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில், முன்தஸீர் சமூகவலைதளங்களில், இஜாஸ் அகமதுவின் காதலி குறித்து அவதுாறாக செய்தி வெளியிட்டார். இதனால், கோபமடைந்த இஜாஸ் அகமது, தன் நண்பர்களான ஜலாலுதீன், சிறுவன் உள்ளிட்ட மூவருடன் சேர்ந்து முன்தஸீரை கொலை செய்தார். போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
இவ்வாறு போலீஸ் கூறினர்.
இஜாஸ் அகமது, 25, ஜலாலுதீன், 23, மீதான வழக்கு, கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி ராதிகா முன்னிலையில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா , இஜாஸ் அகமது, ஜலாலுதீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா, 13,000ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன் குறித்த வழக்கு, சிறார்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.

