ADDED : பிப் 22, 2025 01:29 AM

தஞ்சாவூர்:திருவையாறு அரசு இசைக்கல்லுாரி மாணவர்கள், விடுதி உணவில் பூச்சி, புழுக்கள் இருப்பதாகக் கூறி மறியல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறுஅரசு இசைக் கல்லுாரியில், 230 மாணவ - மாணவியர் பல்வேறு இசைப்பிரிவுகளில் படிக்கின்றனர். இங்கு விடுதி வசதி கிடையாது.
தனியார் மண்டபம், விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். விடுதியில் வழங்கப்படும் உணவில், பீடித்துண்டு, கரப்பான் பூச்சி, புழுக்கள் இருந்துள்ளன.
இதனால், நேற்று காலை, திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி - கும்பகோணம் சாலையில் திரண்ட மாணவர்கள், புதிய விடுதி கட்டித்தரவும், தரமான உணவு வழங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தரவும் வலியுறுத்தி மறியல் செய்தனர்.
திருவையாறு டி.எஸ்.பி., அருள்மொழி அரசு, கல்லுாரி பொறுப்பு முதல்வர் ஸ்ரீவித்யா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

