/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்
/
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்
ADDED : ஜூலை 12, 2025 07:58 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், குளத்தில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவேங்கட உடையான்பட்டியை சேர்ந்த செந்தில் மகன் பாலமுருகன், 10, கனகராஜ் மகன் மாதவன், 10. இருவரும் அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தனர்.
ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த், 8, அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தார்.
செல்லப்பன்பேட்டை சுந்தரமூர்த்தி அய்யனார்கோவில் மண்டலாபிஷேகம் விழாவில், திருவேங்கட உடையான்பட்டி கிராமத்தினர் பங்கேற்றனர். இதில், பாலமுருகன், மாதவன், ஜஸ்வந்த் பெற்றோரும் பங்கேற்றனர்.
மண்டலாபிஷேகம் முடிந்து நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வீட்டுக்கு சென்ற போது, பள்ளிக்கு சென்ற மகன்கள், வீட்டுக்கு வெகு நேரமாகியும் வரவில்லை என, தெரியவந்தது.
சிறுவர்களின் பெற்றோர் தேடிய போது, மருதக்குடி பிள்ளையார் கோவில் குளக்கரையில், சிறுவர்களின் உடைகள் கிடந்துள்ளன. அதிர்ச்சியடைந்த சிலர் குளத்தில் இறங்கி தேடியபோது, பாலமுருகன், மாதவன், ஜஸ்வந்த் மூவரின் உடல்களை மீட்டனர். வல்லம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிராம மக்கள் கூறியதாவது:
சிறுவர்கள் குளித்த குளத்தில் சமீபத்தில் மண் அள்ளப்பட்டுள்ளது. குளக்கரையும் சேதமடைந்து விட்டது. அத்துடன் முறையற்ற நிலையில், 10 அடி அழத்திற்கு, ஆங்காங்கே மண் எடுத்ததால், அங்கெல்லாம் மழைநீர் தேங்கியது.
இதை அறியாமல் சிறுவர்கள் பள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர். மண் அள்ளிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உயிரிழந்த மூன்று சிறுவர்களின் பெற்றோருக்கும் தலா, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.