/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சூரியனார்கோவில் ஆதினம் மீது நடவடிக்கையா?
/
சூரியனார்கோவில் ஆதினம் மீது நடவடிக்கையா?
ADDED : நவ 11, 2024 06:56 AM

தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1039வது சதய விழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை திருமுறை நுாலை யானை மீது வைத்து, 200 ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா நடந்தது.
பின், பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு, வில்வ இலை, வன்னி இலை, திரவிய பொடி, மஞ்சள், பால், தேன் உள்ளிட்ட, 39 வகையான மங்கள பொருட்களை கொண்டு பேரபிஷேகம் நடந்தது.
பெருவுடையாருக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உடையாளூரிலுள்ள அவரது சமாதி என கருதப்படும் இடத்தில் உள்ள லிங்கத்திற்கு, 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.
ராஜராஜசோழன் சதய விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதினம் கூறியதாவது:
பெரிய கோவிலின் கட்டுமானம் குறித்து உலக அளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாதனையாக ராஜராஜ சோழன் செய்துள்ளார். உலகம் முழுதும் சென்று தன் வீரத்தை பறைசாற்றியதோடு, நமக்கு திருமுறையை மீட்டுக் கொடுத்தார்.
திருச்சியில் கோவில் ஒன்றில் கும்பாபிஷகேம் நடைபெறுகிறது. அங்கு அனைத்து ஆதீனங்களும் வருகின்றனர். அப்போது, சூரியனார் கோவில் ஆதினம் திருமணம் தொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளோம்.
தற்போதுள்ள தமிழக அரசு ஆன்மிக அரசு, எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பெரிய கோவில்கள் மட்டுமின்றி, சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்துவது, இந்த அரசின் சாதனையாக உள்ளது.
தமிழக அரசு கோயில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஆதீனங்களுக்கு சொந்தமான திருச்செந்துாரில் உள்ள, 400 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், திருச்சியில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.