/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
போதையில் ரகளை செய்த தி.மு.க., நிர்வாகி கைது
/
போதையில் ரகளை செய்த தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : பிப் 09, 2025 11:59 PM

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவில், வடக்கு வீதியில் ஏராளமான பூக்கடைகள் உள்ளன. வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பூக்களை வாங்க வருவதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
நேற்று முன்தினம் மாலை தி.மு.க., கரை வேட்டியுடன், தலைக்கேறிய மது போதையில் வந்த ஒரு நபர், கடைகளுக்கு பூ வாங்குவதற்காக வந்த மக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும், சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ - வீலர்களை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார்.
ஒரு சைக்கிளை துாக்கி வீசும் போது, தானும் கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் திணறினார். பூக்கடை சந்தையைச் சேர்ந்த பூக்கடை உரிமையாளர் சிவா, கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
அதில், 'தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரான கோவிந்தராஜ், 51, என்பவர், கடைகளையும், வாகனத்தையும் உடைத்து ரகளை செய்தார்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோவிந்தராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர்.

