/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பஸ்சில் பெண் தவற விட்ட நகை, பணம் ஒப்படைப்பு
/
பஸ்சில் பெண் தவற விட்ட நகை, பணம் ஒப்படைப்பு
ADDED : அக் 07, 2025 08:30 PM
தஞ்சாவூர்:பேராவூரணியில், பெண் தவற விட்ட நகை மற்றும் பணத்தை, அவரிடம் ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பொதுமக்கள் பாராட்டினர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து மந்திரிப்பட்டினம் செல்லும் அரசு டவுன் பஸ்சில், சம்பைப்பட்டினத்தை சேர்ந்த வடை வியாபாரம் செய்யும் தரிஷ்கனி, 62, என்பவர் நேற்று பயணம் செய்தார். அடகு வைத்து மீட்கப்பட்ட, 3 சவரன் தங்க நகை, 15 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் போன் போன்றவற்றை ஒரு பையில் வைத்து இருந்தார். பஸ்சில் சீட்டுக்கு கீழே பையை வைத்திருந்த தரிஷ்கனி பையை எடுக்காமல், சம்பைப்பட்டினத்தில் இறங்கி விட்டார்.மந்திரிப்பட்டினத்திற்கு பஸ் சென்று பயணியரை இறக்கி விட்டு, மீண்டும் பேராவூரணி செல்வதற்கு முன், டிரைவர் ஜோதி பாஸ்கர், கண்டக்டர் ரவி ஆகியோர பஸ்சை சோதனை செய்தனர்.அப்போது, சீட்டுக்கு கீழே பை இருந்ததை எடுத்து பார்த்தனர். அதில் நகை மற்றும் பணம் இருந்ததை பார்த்து, உடனடியாக கிளை மேலாளர் எழிலரசனுக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, பையை தவறவிட்ட அந்த பெண், பதற்றத்துடன் டிரைவர் ஜோதி பாஸ்கரை தொடர்பு கொண்டு, தொலைந்த பை குறித்து கூறி அழுதார். தொலைந்த பை போக்குவரத்து அலுவலகத்தில் பத்திரமாக இருப்பதாக டிரைவர் ஜோதி பாஸ்கர் தெரிவித்ததால், அங்கு சென்று, கிளை மேலாளர் எழிலரசனிடம் பையை பெற்றுக் கொண்ட தரிஷ்கனி, டிரைவர் ஜோதி பாஸ்கர் மற்றும் கண்டக்டர் ரவிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். டிரைவர் மற்றும் கண்டக்டரிடன் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்.