/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வருங்கால தலைமுறையினர், சமூகத்துக்கு பொக்கிஷம் : சரஸ்வதி மஹால் நூலகம்; கலெக்டர் புகழாரம்
/
வருங்கால தலைமுறையினர், சமூகத்துக்கு பொக்கிஷம் : சரஸ்வதி மஹால் நூலகம்; கலெக்டர் புகழாரம்
வருங்கால தலைமுறையினர், சமூகத்துக்கு பொக்கிஷம் : சரஸ்வதி மஹால் நூலகம்; கலெக்டர் புகழாரம்
வருங்கால தலைமுறையினர், சமூகத்துக்கு பொக்கிஷம் : சரஸ்வதி மஹால் நூலகம்; கலெக்டர் புகழாரம்
ADDED : செப் 26, 2013 06:37 AM
தஞ்சாவூர்: ''தஞ்சையில் சரஸ்வதி மஹால் நூலகம் மூலம் இதுவரை 540 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலகம் மூலம் வெளியிடப்படும் நூல்களும், நூலகத்திலுள்ள சுவடிகள், பழமையான நூல்களும் சமுதாயத்துக்கும் வருங்கால தலைமுறைக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாக விளங்கும்,'' என, கலெக்டர் பாஸ்கரன் பேசினார்.
தஞ்சையில், மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி 236வது பிறந்தநாளையொட்டி சரஸ்வதி மஹால் நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில், நூலக நிர்வாக அலுவலர் (பொ) சங்கரநாராயணன் வரவேற்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் ரத்தினசாமி, ரங்கசாமி, துரைக்கண்ணு, டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், நகராட்சி தலைவர் சாவித்திரி, மாவட்ட பஞ்., தலைவர் அமுதா, மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, நூலக தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் எழுதிய சரபேந்திர பூபால குறவஞ்சி, தமிழறி மடந்தை கதை உள்பட 8 புதிய நூல்களும், மறுபதிப்பு நூல் ஒன்றும் என, ஒன்பது நூல்களை கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் வெளியிட்டனர்.
இதில், தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி அரசவையில் புலவராக விளங்கிய கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய சரபேந்திர பூபால குறவஞ்சி என்னும் ஏட்டுச்சுவடியில் அமைந்த பாடல், பாட்டுடைத்தலைவன் வரலாறு விளக்குவது சரபேந்திர பூபால குறவஞ்சி நூலாகும்.
மற்றொரு நூலான தமிழறி மடந்தை கதை என்பது கதை இலக்கிய நூலாகும். ஏட்டுச்சுவடியில் அமைந்த நக்கீரர், ஒளவையார், கரிகாற்சோழன், பாண்டிய மன்னன் பாத்திர படைப்புகளை கொண்டது. கதையின் தலைவி, 'தான் சொல்லும் கவிக்கு எதிர்கவிதை படிக்கும் ஆணை திருமணம் செய்து கொள்வேன்' என, சபதம் செய்கிறாள். வெண்பா வடிவத்தில் பாடல், விளக்கமான கதையை கொண்டது ஆகும்.
ஒன்பது நூல்களையும் வெளியிட்டு, கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது:
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சரஸ்வதி பண்டார் என, முன்பு பெயர் வழங்கப்பட்டது. கடந்த 1918ல் மன்னர் சரபோஜி பெயரில் ஆய்வு மையமாக செயல்பட துவங்கியது. இங்கு, 49,000 சுவடிகளும், 45,000 நூல்களும் உள்ளன.
இந்நூலகத்தை உலகத்தரத்தில் மேம்படுத்த 50 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதில், பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, டிஜிட்டல் முறையில் சுவடி, நூல்களை படி எடுத்து சேகரித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சரஸ்வதி மஹால் நூலகத்தை மேம்படுத்த கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பள்ளிகல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. நூலகம் குறித்த குறும்படம் தயாரிக்கவும் ஆவண செய்யப்படும்.
தேவநாகரி, கிரந்தம் போன்ற பழமையான மொழி எழுத்துகள் அழியாமல் இருக்க சரஸ்வதி மஹால் நூலக ஆய்வு மையத்தில் ஆன்லைன் மூலம் கற்பிக்கும் முறை செயல்படுத்தப்படும். சரஸ்வதி மஹால் நூலகம் மூலம் இதுவரை 540 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகைய வரிசையில், நூலக தமிழ்ப்பண்டிதர் மணிமாறன் உள்பட நூலக அலுவலர்கள் அரிய நூல்களை சிரமப்பட்டு, இயற்றி வெளிக்கொண்டு வருவது சமூகத்துக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் பெரும் பொக்கிஷமாக விளங்கும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.