/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அமெரிக்காவில் ஏலத்திற்கு வரும் சிலை மீட்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை
/
அமெரிக்காவில் ஏலத்திற்கு வரும் சிலை மீட்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை
அமெரிக்காவில் ஏலத்திற்கு வரும் சிலை மீட்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை
அமெரிக்காவில் ஏலத்திற்கு வரும் சிலை மீட்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை
ADDED : அக் 18, 2024 03:00 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கோவில்தேவராயன்பேட்டையில் உள்ள சுகுந்தகுந்தாளம்மன் உடனாய மத்ஸபுரீஸ்வரர் கோவிலில், ஜூன் 14ல், பூமியில் இருந்து 14 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றை மீண்டும் இந்த கோவிலிலேயே வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என, ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வலியுறுத்தி வருகிறார். நேற்று அக்கோவிலில் உள்ள சுவாமி சிலை முன், கோரிக்கை மனுக்களை வைத்து வழிபட்டார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்ஸபுரீஸ்வரர் சுவாமி கருவறையில் இருந்து, இறைவி போகசக்தி அம்மனின் பஞ்லோக சிலை, 1974-ல் மாயமானது. இச்சிலை தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மேன்ஹட்டன் சோதெபி தொல்பொருள் ஏலக் கூடத்தில் உள்ளது.
இந்த சிலையை தற்போது ஏலத்திற்கு விட, அந்த ஏல நிறுவனம் தயாராக உள்ளது. இதை, மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
மேலும், இந்த சிலையை அமெரிக்காவிலிருந்து மீட்டு, திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், கைதி போல வைக்காமல் கோவிலிலேயே வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்ஸபுரீஸ்வரர் கோவிலில் 14 சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளை, இந்திய தொல்லியியல் துறையினர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, 2012-ம் ஆண்டு வந்த பின், 2,622 சிலைகளை அமெரிக்காவில் இருந்து மீட்டுள்ளேன். ஓய்வுபெற்ற பின், எட்டு சிலைகள் தொடர்பாக புகார் அளித்துள்ளேன்.
அரிய சிலைகள் கடத்தல் தொடர்பாக, காஞ்சிபுரம், தஞ்சாவூர் எஸ்.பி.,க்கள், எப்.ஐ.ஆர்., போடுவதற்கு கூட தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.