/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கும்பகோணம் மாவட்டம் வாக்குறுதி நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம்
/
கும்பகோணம் மாவட்டம் வாக்குறுதி நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம்
கும்பகோணம் மாவட்டம் வாக்குறுதி நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம்
கும்பகோணம் மாவட்டம் வாக்குறுதி நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம்
ADDED : ஏப் 20, 2025 03:05 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என, 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டு, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், 2021ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, 'தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களுக்குள் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்' என, தெரிவித்தார்.
ஆனால், தி.மு.க., ஆட்சி அமைந்து, 1,500 நாட்களை கடந்தும் இதுவரை மாவட்டமாக அறிவிக்காததால், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதுார் எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகம் மற்றும் ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., கல்யாணசுந்தரம் ஆகியோரின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக, போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்தனர். போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இருப்பினும், கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் அலுவலகம் முன், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், பா.ம.க., மாவட்ட செயலருமான ஸ்டாலின் தலைமையில் போராட்டக் குழுவினர், விசில் ஊதிக் கொண்டு எம்.எல்.ஏ., அலுவலகம் வரை நேற்று ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அலுவலகம் முன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்குமார், திருவிடைமருதுார் எம்.எல்.ஏ.,வும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் அலுவலகம் முன், குடந்தை அரசன் ஆகியோரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதில், 10 பெண்கள் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் கூறியதாவது:
சட்டசபையில், கடந்த 3ம் தேதி நடந்த வருவாய் மானிய கோரிக்கை நிகழ்வில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கவில்லை.
தற்போது 30ம் தேதிக்குள், கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காவிட்டால், அமைச்சர் செழியன், அன்பழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எங்களுடன் போராட வர வேண்டும். கும்பகோணத்தில் விரைவில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

