/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
விவசாயி வெட்டிக்கொலை உறவினர்கள் போராட்டம்
/
விவசாயி வெட்டிக்கொலை உறவினர்கள் போராட்டம்
ADDED : ஏப் 10, 2025 02:02 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்க்கரசு, 54, மற்றும் பாப்பாநாட்டை சேர்ந்த திருக்குமார் ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு இருந்தது. ஐந்து மாதங்களுக்கு முன் திருக்குமார் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக தீர்க்கரசு, சிறைக்கு சென்று, ஜாமினில் வந்தார்.
கடந்த ஏப்., 2ம் தேதி இரவு, டூ-வீலரில் கடைத்தெருவுக்கு வந்த தீர்க்கரசுவை நான்கு பேர் வெட்டினர். திருக்குமாரின் உறவினரான சசிகுமார், கலையரசன், முனிஷ்குமார் ஆகியோரை இரண்டு நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர்.
பலத்த வெட்டுக் காயங்களுடன் தீர்க்கரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கிராம மக்கள், கொலைக்கான முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போலீஸ் ஸ்டேஷன் முன் பந்தலிட்டு, பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

