/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பள்ளி இடம் வீட்டு மனையாக மாற்றமா? மேயர் மனைவி, டி.ஆர்.ஓ., ஆஜராக உத்தரவு
/
பள்ளி இடம் வீட்டு மனையாக மாற்றமா? மேயர் மனைவி, டி.ஆர்.ஓ., ஆஜராக உத்தரவு
பள்ளி இடம் வீட்டு மனையாக மாற்றமா? மேயர் மனைவி, டி.ஆர்.ஓ., ஆஜராக உத்தரவு
பள்ளி இடம் வீட்டு மனையாக மாற்றமா? மேயர் மனைவி, டி.ஆர்.ஓ., ஆஜராக உத்தரவு
ADDED : நவ 25, 2024 04:53 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், 1973ல் அருளானந்தம்மாள் நகர் உருவாக்கப்பட்ட போது, நகராட்சி பள்ளி அமைக்க, 45,000 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், வருவாய் துறையில் தனிநபர் பெயரிலும், நகரமைப்பு பிரிவு ஆவணங்களில் கமிஷனர் பெயரிலும் ஆவணங்கள் இருந்தன.
இடத்தை, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை சேர்ந்த நாகைய்யா மனைவி பொன்னாமணி 1997ல், வாங்கினார். பிறகு, வீட்டு மனையாக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்த போது, நகரமைப்பு மனை பிரிவு ஆவணங்களில், சம்பந்தப்பட்ட இடம், நகராட்சிக்கு சொந்தமானது என்பதால், அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், பழைய கிரைய பத்திரத்தை வைத்து வருவாய்த்துறையில், நகராட்சி ஆணையர் பெயரில் இருந்ததை முறைகேடாக பொன்னாமணி, தன் பெயருக்கு மாற்றினார். கடந்த ஆண்டு, மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார், மேயர் ராமநாதன் இருவரும், தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, பள்ளிக்கான இடத்தை பொன்னாமணி பெயரில் வீட்டு மனையாக பிரிக்க அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்காக, தன் மனைவி சங்கீதா பெயரில், 2,000 சதுர அடிக்கான ஒரு மனையை, மேயர் ராமநாதன் வாங்கியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக, அருளானந்தம்மாள் நகரைச் சேர்ந்த பத்மநாபன், சில மாதங்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிபதி, வரும், 27ம் தேதி பொன்னாமணி, மேயர் மனைவி சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுஉள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் கூறியதாவது:
கடந்த 2011க்கு முன் வரை, மனை யார் பெயரில் இருக்கிறதோ, அவர்கள் பெயரில் தான் வருவாய் கணக்கில் பட்டா இருக்கும். ஆனால், நகராட்சி, மாநகராட்சிக்கு என மனையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தால், நகரமைப்பு பிரிவு ஆவணங்களில், சம்பந்தப்பட்ட கமிஷனர் பெயரில் இருக்கும்.
கடந்த, 2011ல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், நகராட்சி, மாநகராட்சிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை, உரிமையாளர்கள், கமிஷனர் பெயரில், தான செட்டில்மென்ட் செய்து கொடுக்க சட்டம் வந்தது.
தான செட்டில்மென்ட் வந்த பிறகு வருவாய் கணக்கிலும் மாறி விடும். ஆனால், முறைகேடாக வருவாய்த்துறையில் பொன்னாமணி மாற்றிய பட்டாவை, நகரமைப்பில் கமிஷனர் பெயரில் உள்ள ஆவணத்தை, முறைகேடாக கமிஷனர், மேயர் சட்டத்தை மீறி செயல்பட்டு மாற்றியுள்ளனர்.
மேயர், மாநகராட்சி கமிஷனர், இடத்தை வாங்கிய மேயர் மனைவி, வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.