/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
விஷம் வைத்து பெண் கொலை? கணவர் குடும்பத்தினர் மீது புகார்
/
விஷம் வைத்து பெண் கொலை? கணவர் குடும்பத்தினர் மீது புகார்
விஷம் வைத்து பெண் கொலை? கணவர் குடும்பத்தினர் மீது புகார்
விஷம் வைத்து பெண் கொலை? கணவர் குடும்பத்தினர் மீது புகார்
ADDED : ஜூலை 13, 2025 01:17 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே பெண் உயிரிழந்த விவகாரத்தில், கணவர் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஆத்திக்கோட்டையை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 21; கும்பகோணம் அருகே சாக்கோட்டையை சேர்ந்தவர் சேதுராமன், 34. இருவரும் விவாகரத்தானவர்கள்.
ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம், 2024, பிப்., 22ல் திருமணம் நடைபெற்றது. ஜூன், 8 பாக்கியலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பெற்றோர் வீட்டில் இருந்த பாக்கியலட்சுமியை, ஜூன், 28ல் சேதுராமன் குடும்பத்தினர், வலுக்கட்டாயமாக அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
பாக்கியலட்சுமி, 'என்னிடம் குழந்தையை தருவதில்லை. வீட்டில் வேலைக்காரியாக மட்டும் வைத்துள்ளனர்' என, அழுதபடி பெற்றோரிடம் போனில் கூறியுள்ளார்.
ஜூலை, 8ல் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என, தந்தை வல்லத்தரசுக்கு தகவல் அளித்தார். அங்கு சென்றபோது, பாக்கியலட்சுமி சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்தார். அவரை தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று பாக்கியலட்சுமி உயிரிழந்தார்.
வல்லத்தரசு குடும்பத்தினர், நாச்சியார்கோவில் போலீசில், 'மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது' என, நேற்று புகாரளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சகோதரர் கருணாகரன் கூறுகையில், ''என் அக்காவை, அவரது மாமியார் உள்ளிட்டோர் மிகவும் கொடுமை செய்துள்ளனர். வரதட்சனையாக பல பொருட்களை கேட்டு வாங்கிக்கொண்டனர்.
பிரேத பரிசோதனையில், அவரது உடலில் விஷம் கலந்திருப்பதாகவும், மார்பில் உதைத்தற்கான தழும்புகள் உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன்,'' என்றார்.

