ADDED : ஜூலை 13, 2011 10:28 PM
தேனி : கேரளாவிற்கு இயக்கப்படும் அரசு பஸ்களில், நூதன முறையில் கஞ்சா கடத்தப்படுகிறது.
தேனி மாவட்டம் வழியாக அரசு பஸ்களில் கஞ்சா கடத்தப்படுகிறது. கேரளா யானைகஜம்-கம்பம், மூணாறு-தேனி, நெடுங்கண்டம்-மதுரை, மூணாறு-மதுரை, குமுளி-மதுரை, குமுளி-மார்த்தாண்டம் பஸ்களில் இது போன்ற கடத்தல் அதிகம் நடக்கிறது. இதற்காக இந்த ரூட்களை பிடிப்பதற்காக டிரைவர் கண்டக்டர்கள் அதிக தொகை கொடுக்கின்றனர். 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை ரூட் பேரம் பேசப்படுகிறது. இந்த பஸ்களில் தேயிலை மூடைகளுக்கு மத்தியில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து கடத்துகின்றனர். பஸ்களின் சீட்களுக்கு அடியில் இவை மறைத்து வைக்கப்படுகின்றன. சோதனை மேற்கொண்டாலும், அதற்கு யாரும் உரிமை கோரப்போவதில்லை. இந்த முறையில் கஞ்சா கடத்தல் வெகுஜோராக நடக்கிறது. அரசு பஸ்கள் கஞ்சா கடத்தும் பஸ்களாக மாறிவிட்டன. தேனி கோட்ட மேலாளர் வெங்கடேசன் கூறுகையில், ''தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், கடத்தல் கண்டறியப்பட்டால் டிரைவர், கண்டக்டர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

