ADDED : மே 13, 2024 07:03 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சில்க்வார்பட்டியில் பொதுக் கிணறுக்கு பாதுகாப்பு மூடி அமைத்து, நீரை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு ஆண்டிபட்டி -சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் ஆகிறது. கூடுதல் தேவைக்கு சமுதாயக்கூடம் அருகே உள்ள பொதுக் கிணற்று நீரை கிராமம் முழுவதும் பயன்படுத்துகின்றனர். அகலமான இந்த கிணறுக்கு பாதுகாப்பு மேல் மூடி இல்லை. கிணற்றில் குப்பை அதிகம் சேர்கிறது. கிணற்றில் கோழி, பூனை அவ்வப்போது தவறி விழுந்து இறந்து விடுகிறது.
இதனால் தண்ணீரின் தன்மை கெட்டுப்போகிறது. ஊராட்சி துணைத் தலைவர் மச்சக்காளை கூறியதாவது: ஆழமான கிணற்றில் தண்ணீர் அதிகம் உள்ளது. பாதுகாப்பு மூடி இல்லாததால் சேரும் குப்பையை அடிக்கடி சுத்தம் செய்ய முடியவில்லை. மேல் மூடி அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஊராட்சி தலைவரின் ஒப்புதலுக்குப் பின் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.