/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எள் விளைச்சலும், விலையும் திருப்தி
/
எள் விளைச்சலும், விலையும் திருப்தி
ADDED : செப் 07, 2024 06:58 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் சித்திரை பட்டத்தில் மேற்கொண்ட எள்ளு சாகுபடியில் தற்போது அறுவடை முடிந்துள்ளது. ஏக்கருக்கு 400 கிலோவிற்கு மேல் மகசூல் கிடைத்துள்ளது. விலையும் திருப்தியாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆண்டுதோறும் சித்திரை பட்டத்தில் மானாவாரி நிலங்களில் 1500 எக்டேர் வரை எள்ளு சாகுபடியாகிறது.
வேளாண் துறை எள்ளு விதைகளை , 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்தது. தற்போது கம்பம் பகுதியில் எள்ளு அறுவடை முடிந்துள்ளது.
கடந்த மே மாதம் விதைப்பு பணிகளை மேற்கொண்டனர். இப் பட்டத்தில் வி.ஆர்.ஐ. 4 , டி. எம்.வி. 7, எஸ்.வி.பி.ஆர் 1 ஆகிய ரகங்கள் விவசாயிகளால் தேர்வு செய்யப்பட்டது. இந்த 3 ரகங்களும் 75 முதல் 90 நாட்கள் மகசூல் காலமாகும்.
பொதுவாக 800 கிலோ முதல் 1100 கிலோ வரை எக்டருக்கு மகசூல் கிடைக்கும். தற்போது ஆயிரம் கிலோ வரை கிடைத்துள்ளது. வேர் அழுகல், இலைப் புள்ளி உள்ளிட்ட சில நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களாகும்.
தற்போது அறுவடை முடிந்த நிலையில் கிலோ ௹.180 க்கு மேல் விலையும் கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் திருப்தியடைந்துள்ளனர்.