/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாண்ட் வாகன காப்பத்தில் தேனி நகராட்சிக்கு நிதியிழப்பு: டோக்கன் வசூல் குளறுபடியால் பயணிகள் அவதி
/
பஸ் ஸ்டாண்ட் வாகன காப்பத்தில் தேனி நகராட்சிக்கு நிதியிழப்பு: டோக்கன் வசூல் குளறுபடியால் பயணிகள் அவதி
பஸ் ஸ்டாண்ட் வாகன காப்பத்தில் தேனி நகராட்சிக்கு நிதியிழப்பு: டோக்கன் வசூல் குளறுபடியால் பயணிகள் அவதி
பஸ் ஸ்டாண்ட் வாகன காப்பத்தில் தேனி நகராட்சிக்கு நிதியிழப்பு: டோக்கன் வசூல் குளறுபடியால் பயணிகள் அவதி
ADDED : ஏப் 21, 2024 04:58 AM
தேனி புதுபஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர், உள்ளூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தை சேர்ந்த பலரும், வெளியூர்களில் இருந்து இங்கு பணிபுரிவோர் பஸ் ஸ்டாண்டில் உள்ள வாகன காப்பகங்களில் தங்கள் டூவீலர்களை கட்டணம் செலுத்தி நிறுத்தி செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி வாகன காப்பகம் மூன்று ஆண்டுகளுக்கு குறைந்தது ரூ.10 லட்சத்திற்கு ஏலம் விடப்படும். ஏற்கனவே இரு காப்பகங்கள் ஏலம் விடப்பட்டிருந்தது. மற்ற இரண்டு காப்பங்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டு என்ன காரணத்தினாலோ இருமுறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. ஏலம் ஒத்தி வைக்கப்பட்ட இரு வாகன காப்பங்களும் தற்போது நகராட்சி ஏற்று நடத்துகிறது.
வாகன காப்பகம் நகராட்சி ஊழியர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு வரும் வாகனங்களுக்கு 24 மணிநேரத்திற்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. காப்பகத்தை ஏலதாரர்கள் நடத்தும் போது தினமும் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து சென்றன. தற்போது தினமும் 300 வாகனங்கள் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1000 முதல் ரூ.1500 வரை வசூல் குறைந்தது.
உண்மையிலே வாகனங்கள் வரத்து குறைந்ததா அல்லது வாகனங்கள் குறைத்து கணக்கு காட்டப்படுகிறதா, வாகன வசூல் தனியார் பைகளுக்கு செல்கிறதா என்பதில் சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது.
குளறுபடி
நகராட்சி வாகன காப்பகங்களில் இரவில் வாகனங்களை நிறுத்துவோர் பணம் கொடுத்து டோக்கன் பெற்று செல்கின்றனர். மறுநாள் வாகனங்களை எடுக்க வரும்போது டூவீலர்களுக்கு பணம் வழங்கவில்லை என கூறி மீண்டும் பணம் கேட்டு ஊழியர்கள் பிரச்னை செய்கின்றனர். பயண அவசரத்தில் பலரும் தங்கள் டோக்கனில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்காமல் சென்று விடுகின்றனர். மறுநாள் வேறு ஊழியர் பணிக்கு வந்து மீண்டும் கட்டணம் கேட்கும் போது பிரச்னை ஏற்படுகிறது. பயணிகள் ஏற்கனவே கட்டணம் வழங்கியதை கூறும் போது ஊழியர்கள் வாகன உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த பிரச்னை அடிக்கடி ஏற்பட்டு வாக்குவாதம் தொடர்கிறது.
வாகன காப்பத்தில் நகராட்சிக்கு தினமும் ஏற்பட்டுவரும் நிதி இழப்பை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன காப்பங்களில் போதிய மின் விளக்குகள் வசதி செய்திட வேண்டும்.

