ADDED : மே 21, 2024 07:38 AM
போடி: போடி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், குரங்கணி, கொட்டகுடி, அகமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான வருமானம், இருப்பிடம், பட்டா மாறுதல், ஜாதி, ஆதார் அட்டை உட்பட பல்வேறு சான்றிதழ் பெற தினந்தோறும் நுாற்றுகணக்கனோர் போடி தாலுகா அலுவலகத்திற்கு வருகின்றனர்.
தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி இன்றி மக்கள் சிரமம் அடைந்தனர். இங்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. பல ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு சில நாட்கள் மட்டுமே செயல்பட்டது. அதன்பின் பழுதடைந்து தற்போது பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாததனால் மக்கள் அருகே உள்ள ஓட்டல், பெட்டி கடைகளை நாடி சென்று சிரமம் அடைந்து வருகின்றனர்.
பொது மக்களின் தாகத்தை போக்கிட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

