/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓராண்டில் 239 லி., தாய்ப்பால் தானம் பெற்று குழந்தைகளுக்கு வழங்கல் தேனி மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியர் தகவல்
/
ஓராண்டில் 239 லி., தாய்ப்பால் தானம் பெற்று குழந்தைகளுக்கு வழங்கல் தேனி மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியர் தகவல்
ஓராண்டில் 239 லி., தாய்ப்பால் தானம் பெற்று குழந்தைகளுக்கு வழங்கல் தேனி மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியர் தகவல்
ஓராண்டில் 239 லி., தாய்ப்பால் தானம் பெற்று குழந்தைகளுக்கு வழங்கல் தேனி மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியர் தகவல்
ADDED : ஆக 16, 2024 04:44 AM

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2015ல் தாய்ப்பால் வங்கி துவக்க நாளாகும். அன்று முதல் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு தாய்ப்பால் தானம் பெறப்பட்டு பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஓராண்டில் 1200 தாய்மார்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு 239 லிட்டர் தாய்ப்பால் சேகரிப்பட்டது. இது 2 லட்சத்து 39 ஆயிரம் மி.லி., ஆகும். இதனை பாதுகாப்பான முறையில் பதப்படுத்தி 1533 குழந்தைகளுக்கு தேவையின் கருதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 4 லிட்டர் தாய்ப்பால் கையிருப்பில் உள்ளது.
இம்மருத்துவக கல்லுாரி மருத்துவமனையின் ஒருங்கிணைந்த தாய்சேய்,பிரசவித்த தாய்மார்களுக்கான சிகிச்சை மையம் (சீமாங் சென்டரில்) உள்ள தாய்ப்பால் வங்கியின் செயல்பாடு, தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் யாரெல்லாம் தாய்ப்பால் தானம் வழங்கலாம் என்பது குறித்து மருத்துவக்கல்லுாரி குழந்தைகள் நலத்துறையின் சிகிச்சைக்கான உதவி பேராசிரியர் டாக்டர் பி.ரகுபதி தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக பேசியதாவது:
உலக தாய்ப்பால் வார விழா பற்றி
உலக தாய்ப்பால் வார விழாவின் நோக்கம் அடுத்த சந்ததியை ஆரோக்கியமாக, நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக உருவாக்குவதுதான் நோக்கம். அதற்கு பணிபுரியும், இல்லத்தரசிகளாக உள்ள, ஏழை எளிய கூலி வேலை செய்யும் பெண்கள் என அனைவரும் பாதுகாப்பான முறையில் தாய்ப்பால் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்தாண்டின் விழிப்புணர்வு பிரகடனமாக இடைவெளியை குறைப்போம், அனைத்து தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கும் ஆதரவு தருவோம்' என என இந்திய குழந்தைகள் நல மருத்துவக் குழுமம் அறிவித்துள்ளது.
தாய்ப்பால் தானம் யார் வழங்கலாம்.
ஆரோக்கியமாக தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா, இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளை தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலுாட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கலாம். குறிப்பாக தானம் வழங்குபவரின் பச்சிளங்குழந்தை ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரித்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ரத்தப்பரிசோதனையில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ், பிற பாதிப்புகள் இல்லாத தாய்மார்கள், குழந்தை தாய்ப்பால் குடித்தவுடன் தாய்ப்பால் சுரப்பு உள்ளவர்கள் தாய்ப்பால் வழங்க தகுதியானவர்கள்.
தாய்ப்பால் தான நடைமுறைகள் என்ன
தானம் அளிக்கும் தாய்மாரின் முழு ஒப்புதல் எழுத்துப்பூர்வமாக பெறப்படும். ரத்தப்பரிசோதனைக்கு பின் நோய் தொற்று இல்லை என தெரிந்து தானம் அளிக்கும் மையத்திற்கு சென்று, தனக்கு தானோ முறையிலும், அல்லது பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியும் தாய்ப்பால் அதற்குரிய கொள்கலனில் சேகரிக்கப்படும். இதில் நுண்ணுயிர்கள் கிருமிகள் உள்ளதா என்பதை கண்டறிய வளர்சோதனை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பின் கொள்கலனின் காலாவதி தேதி குறிப்பிட்டு, ப்ரீசரில் - 20 டிகிரி செல்சியஸில் உறைவிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை பாதுகாப்பு செய்து தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கிட தாய்ப்பால் வங்கி உதவுகிறது. இதற்கான சான்றிதழும் தேவைப்பட்டால் வழங்கப்படும்.
தாய்ப்பால் வழங்க குழந்தைகளிடம் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?
தாய்ப்பாலுக்கு உயிர்திரவம் என்ற பெயரும் உண்டு. வேறு எந்த திரவத்திலும் குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தி இந்தளவு இருக்காது. அதனால் தாய்ப்பாலை தவிர்த்து பிற புட்டிப்பால், பவுடர் பாலை குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது. மேலும் புட்டியில் பால் வழங்கக்கூடாது. ஏனெனில் புட்டியில் பால் சொட்டு சொட்டாக விழும். ஆனால் தாயிடம் குழந்தை கஷ்டப்பட்டு குடிக்கும் போது உணர்வு ரீதியான பிணைப்பு குழந்தை பிறந்த 15 முதல் 20 நாட்களில் ஏற்பட்டு விடும். உதாரணமாக தாய் குழந்தை அருகில் சென்றதும் எளிதாக குழந்தை அடையாளம் கண்டு கொள்ளும். பிறந்த குழந்தை அழுகையினால் மட்டுமே அதன் அத்தனை தேவைகளுக்கும் தாயை தன்னை கவனிக்கு உணர்த்தும்.
ஒரு வயது ஆன பின்தான் குழந்தை பேச ஆரம்பிக்கும். அதுவரை குழந்தை அடிக்கடி அழுவதை வைத்து, தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. குழந்தைக்கு பசி எடுத்தால் உடனடியாக தாயை கண்களால் விரித்து பார்க்கும், தேடும், கைகளை வாயில் வைத்து சுவைக்கும். தாய் குழந்தையை துாக்கும் போது மிகவும் அரவணைப்பாக இருக்கும். இதனை பிரசவித்த தாய்மார்கள் 15, 20 நாட்களிலேயே குழந்தையை துாக்கும்போது உணர முடியும். இதுமாதிரியான குழந்தைகளின் அணிச்சை செயலாகும். அதனால் பிரசவித்த தாய்மார்கள் மிககவனத்துடன் தாய்ப்பால் வழங்க வேண்டும்.

