ADDED : ஆக 01, 2024 05:49 AM

ஆண்டிபட்டி: ஆந்திராவிலிருந்து விற்பனைக்காக ஆண்டிபட்டி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஆந்திரா, விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக தேனி எஸ்.பி., தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் சரவணகுமார், க.விலக்கு எஸ்.ஐ., பிருந்தா மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். க.விலக்கு பஸ் ஸ்டாப் அருகே பஸ்சில் இருந்து இறங்கிய சந்தேகப்படும்படியான பெண்ணிடம் சோதனை மேற்கொண்டதில் அவரிடம் 2 கிலோ கொண்ட இரு கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் எழுமலை அருகே எருமார்பட்டியை சேர்ந்த சசிகலா 41 என்பதும், அவர் கொண்டு வந்த கஞ்சாவை க.விலக்கு அருகே முத்தனம்பட்டியை சேர்ந்த வேல்முருகன் 36, கவாஸ்கர் 24, ஆகியோருக்கு விற்க இருப்பதும் தெரிய வந்தது.
மூன்று பேரையும் கைது செய்த போலீசார் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.