/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கெங்குவார்பட்டியில் கண்டறியப்பட்ட 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு
/
கெங்குவார்பட்டியில் கண்டறியப்பட்ட 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு
கெங்குவார்பட்டியில் கண்டறியப்பட்ட 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு
கெங்குவார்பட்டியில் கண்டறியப்பட்ட 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு
ADDED : ஆக 04, 2024 10:45 PM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் கி.பி., 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
கெங்குவார்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் அப்பாஸ். இவர் அளித்த தகவலின்படி கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வம், பேராசிரியர் மாணிக்கராஜ் ஆகியோர் கெங்குவார்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஞானம்மாள் கோயில் வளாகத்தில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த ஆறு வரிகள் கொண்ட கல்வெட்டை அவர்கள் கண்டறிந்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் செல்வம் கூறியதாவது: பிற்கால பாண்டியர் காலத்தில் மஞ்சள் ஆற்றின் வடக்கு கரையில் கட்டப்பட்ட காளகஸ்தீஸ்வரர் சிவன் கோயில், ஞானம்மாள் கோயில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இதற்கு முன்பும் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது முழுமை அடையாத துண்டு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது.
கோயில் கருவறைக்கு தெற்கு பக்கம் ஆறு வரிகளில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டில் விக்கிரம பாண்டிய மன்னன் காலத்தில் தினமும் தடையின்றி பூஜைகள் நடக்க, கோயில்களில் தொண்டு செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட (காராண்மை) நிலத்தில் இருந்து அரை மா (7200 சதுர அடி), காணி நிலத்தை (57 ஆயிரத்து 600 சதுர அடி) மட்டும் உழுது பயிர் செய்வதற்காக செலுத்தப்படும் வரியை இங்குள்ள விநாயகருக்கு பூஜைகள் செய்ய தானமாக வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் உள்ளன.
கல்வெட்டில் உள்ள 'சாயல் மலைக்குடி நாடு' என்பது மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு பகுதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கல்வெட்டில் உள்ள சங்கரநாராயண நல்லூர், கஞ்சனுார் ஆகிய இரண்டு ஊர்களும் அழிந்த பகுதிகளாக இருக்கலாம். இருப்பினும் இக்கல்வெட்டு மேலும் ஆய்வுக்குரிய ஒன்றாக உள்ளது. கல்வெட்டு முழுமையடையாமல் சிதைந்து இருப்பதால் முழு செய்தியையும் அறிய முடியவில்லை என்றார்.