ADDED : ஆக 04, 2024 06:20 AM

தேவாரம் : தேவாரம் அருகே காட்டுயானை தாக்கி விவசாயி பலியானார்.
தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலை தெருவில் வசித்தவர் ரங்கசாமி 70. இவர் நேற்று அதிகாலை தேவாரம் மேற்கு அடிவாரம் சாக்கலூத்து ஓடை பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை பயிர்களை சேதம் ஏற்படுத்தி, ரங்கசாமியை தாக்கி உள்ளது. இதில் ரங்கசாமி சம்பவ இடத்திலே இறந்தார். தோட்ட வேலைக்கு சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இறந்த உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தேவாரம், கோம்பை பகுதியில் சுற்றி திரியும் யானைகளால் விவசாய நிலங்கள் சேதம், உயிர்கள் பலியாகி வருவது தொடர்வதால் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தேவாரம் மலை அடிவரப் பகுதியில் விளை நிலங்களில் சுற்றி திரியும் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.