/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வனக்காவலர் காயம்
/
கம்பத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வனக்காவலர் காயம்
கம்பத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வனக்காவலர் காயம்
கம்பத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வனக்காவலர் காயம்
ADDED : ஆக 25, 2024 02:28 AM

கம்பம்,:தேனிமாவட்டம் கம்பம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் அதனை விரட்ட சென்ற வனக்காவலர் ரகு 30, காயமடைந்தார்.
கம்பம் நகர் கோம்பை ரோடு வீதி, தீயணைப்பு துறை அலுவலகம் எதிரில் உள்ள வீதியில் நேற்று முன்தினம் மாலை சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அது காட்டுப் பூனையாக இருக்கலாம் என கருதி அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
நேற்று காலை வனத்துறையினர் சிலர் அங்கு சிறுத்தை உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கையில் குச்சிகளுடன் புதர் பகுதியில் தரையை தட்டிக் கொண்டே சென்றுள்ளனர். அப்போது தனியாக சென்ற கம்பம் மேற்கு வனச்சரகத்தை சேர்த்த வனக்காவலர் ரகு என்பவர் மீது சிறுத்தை பாய்ந்து நகங்களால் தாக்கி காயப்படுத்தியது.
இதைப் பார்த்த மற்ற வனக்காவலர்கள் சத்தம் போட்டு ஓடி வருவதை பார்த்த சிறுத்தை வனக்காவலரை விட்டு விட்டு புதருக்குள் சென்று மறைந்தது. காயமடைந்தவரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்து அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. போலீசார், தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட வன அலுவலர் சமர்த்தா சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டவும் ஊருக்குள் திரும்பினால் வலையை பயன்படுத்தி பிடிக்கவும் வனத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வாய்ப்பு உள்ளதா என அறிய மதுரை சரக வனத்துறை கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
நாய்களை விரும்பி உண்ணும்
வனப்பகுதியை ஒட்டி தோட்டங்களில் காவலுக்கு உள்ள நாய்களை அடித்து உண்பது சிறுத்தையின் வழக்கம்.
இதனால் கடந்தாண்டு கம்பமெட்டு புதுக்குளம் பகுதியில் தோட்டங்களில் நாய்கள் இறந்து கிடந்தன. தற்போதும் நாய்களை வேட்டையாடவே சிறுத்தை வந்துள்ளது என்கின்றனர் வனத்துறையினர். கடந்தாண்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை கம்பம் ஊருக்குள் சில நாட்கள் உலா வந்தது. வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப்பின் சின்ன ஓவுலாபுரம் அருகில் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் திருநெல்வேலி வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது சிறுத்தை ஊருக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.