/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மிளகாய், தக்காளி, கத்தரி நாற்று வளர்க்க நடவடிக்கை தேவை
/
மிளகாய், தக்காளி, கத்தரி நாற்று வளர்க்க நடவடிக்கை தேவை
மிளகாய், தக்காளி, கத்தரி நாற்று வளர்க்க நடவடிக்கை தேவை
மிளகாய், தக்காளி, கத்தரி நாற்று வளர்க்க நடவடிக்கை தேவை
ADDED : மே 07, 2024 06:03 AM
கம்பம்: காய்கறி நாற்றுகள் வாங்க 50 கி.மீ. பயணம் செய்வதை தவிர்க்க கம்பம் பகுதியில் நாற்றுக்கள் பெற தோட்டக்கலைத்துறை நர்சரி துவக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் மானியமாக வழங்கப்படும். இந்த நாற்றுகளை வாங்குவதற்கு கூடலூர், கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, சின்னமனுார், அணைப்பட்டி மற்றும் சின்னமனூர் வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் பெரியகுளம் தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல வேண்டும். குறைந்தது 50 கி.மீ பயணம் செய்து நாற்றுகளை எடுத்துவர வாகனங்களை கொண்டு செல்ல வேண்டும். வாடகை ரூ.3 ஆயிரம் வரை ஆகும்.
இதனால் விவசாயிகள் கூடுதல் செலவு, சிரமத்தால் அவதிப்படுகின்றனர். விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பசுமைக்குடிலில் நர்சரி தோட்டக்கலைத்துறை கடந்தாண்டு துவக்கியது. இதில் தக்காளி, மிளகாய், கத்தரி நாற்றுகள் வளர்க்கும் பணிகள் துவங்கியது. ஆனால் அதற்குள் காய்கறி மொத்த வணிக வளாகம் கட்ட அறிவிப்பு வெளியானதால் நர்சரி செயல்படுவது நிறுத்தப்பட்டது. இப் பிரச்னையில் நிறுத்தப்பட்ட பணிகளை தோட்டக்கலைத்துறை மீண்டும் துவக்க வேண்டும். அல்லது கம்பம் அலுவலக வளாகத்தில் நர்சரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகத்தில் போதிய அளவு காலி இடம் உள்ளது. எனவே தோட்டக்கலைத்துறையினர் கம்பம் அல்லது சின்னமனூரில் நர்சரி துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்மூலம் இப் பகுதி விவசாயிகள் நாற்றுகள் வாங்க பெரியகுளம் செல்ல வேண்டியது இல்லை. பயண நேரம், செலவு, வாகன வாடகை மிச்சமாகும். தோட்டக்கலைத்துறை நாற்றுகளை வளர்த்து விற்பனை செய்ய துரிதமாக செயல்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.