/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர் தேங்காத பாலக்கோம்பை ஊசிமலை கண்மாய் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பதால் கேள்விக்குறியாகும் விவசாயம்
/
நீர் தேங்காத பாலக்கோம்பை ஊசிமலை கண்மாய் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பதால் கேள்விக்குறியாகும் விவசாயம்
நீர் தேங்காத பாலக்கோம்பை ஊசிமலை கண்மாய் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பதால் கேள்விக்குறியாகும் விவசாயம்
நீர் தேங்காத பாலக்கோம்பை ஊசிமலை கண்மாய் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பதால் கேள்விக்குறியாகும் விவசாயம்
ADDED : மே 09, 2024 05:54 AM

ஆண்டிபட்டி: பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத பாலக்கோம்பை ஊசிமலை கண்மாயில் நீர்த்தேங்காததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு உள்ளன. வளமான மண் இருந்தும் நீர் ஆதாரம் குறைவதால் விவசாயத்தை தொடர முடியாமல் பலரும் மாற்றுத் தொழில் தேடி வெளியூர் செல்வது தொடரும் நிகழ்வாக உள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஊசிமலை அடிவாரத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய் அமைக்கப்பட்டது. கண்மாயில் 5.60 மில்லியன் கன அடி நீர் தேங்கும் வசதி செய்து தரப்பட்டது. ஒரு கி.மீ., நீளம் கொண்ட வாய்க்கால் மூலம் சென்ற நீரால் 120 ஏக்கரில் நேரடி பாசனம் இருந்தது. தற்போது நீர் வெளியேறும் மதகு, நீர் செல்லும் வாய்க்கால் இருந்த சுவடுகள் மறைந்துவிட்டன. கண்மாய், நீர் வரத்து ஓடைகள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை. மழையால் கிடைக்கும் நீர் கண்மாய்க்கு முழு அளவில் வந்து சேர்வது இல்லை. கடந்த காலங்களில் நிரம்பிய கண்மாயில் இருந்து இப்பகுதியில் பல ஏக்கரில் நேரடி பாசனம் செய்து வந்தனர். தற்போது கண்மாயில் மழைக் காலத்தில் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கும் நீர் சில நாட்களில் வற்றி விடும். கண்மாய் நீரால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகவில்லை. நிலத்தடி நீர் குறைந்ததால், இப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. விவசாயம் இன்றி வாழ்வாதாரம் இழந்த பலரும் மாற்றுத் தொழிலுக்காக வெளியூர் செல்வது தொடரும் நிகழ்வாக நடந்து வருகிறது.
இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
முடங்கிய கால்நடை தொழில்
ப.வேல்சாமி, கொழுஞ் சிபட்டி: இக்கண்மாய்க்கு வடுவூத்து, ஆனைக்கால் முடங்கி, பண்ணைக்காடு, கடம்பத்து முடங்கி, ஊசி மலை முடங்கி பகுதிகளில் இருந்து மழைக் காலங்களில் நீர் வரத்து கிடைக்கும். கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு, கண்காணிப்பு இல்லாததால் நீர்வரத்து ஓடைகள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் மழை பெய்தாலும் கண்மாய்க்கு நீர் வராமல் திசை மாறிச்சென்று வீணாகிறது. கண்மாயில் நீர் தேங்காததால் கண்மாயை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பாதித்துள்ளது.
மூன்று போகம் விளைந்த நிலங்கள் தற்போது மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக மாறிவிட்டன. விவசாயம் பாதித்ததால் உப தொழிலான கால்நடை வளர்ப்பு தொழிலும் முடங்கி விட்டது., என்றார்.
அரசு நடவடிக்கை அவசியம்
சி.ராமர், பாலக் கோம்பை: கடந்த காலங்களில் கண்மாய் நிரம்பி ஓடை வழியாக செல்லும் உபரி நீரால் பல ஏக்கரில் நிலத்தடி நீரை சமன் செய்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாயில் நீர் தேங்காததால் பாலக்கோம்பை, கென்னடி நகர், கொழிஞ்சிபட்டி, ராயவேலுார், வண்டியூர், ஆவாரம்பட்டி, ராமலிங்காபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் இறவை பாசன நிலங்களிலும் விவசாயத்தை தொடர முடியவில்லை. கண்மாய், ன் நீர் வரத்து பாதைகளை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கண்மாயில் முழு அளவில் ஒரு முறை நீர் தேங்கினால் மூன்று ஆண்டுகள் நிலத்தடி நீர் கைகொடுக்கும். கண்மாயில் நீர் தேங்குவதற்கான வழி இல்லை. மூல வைகை ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்து கண்டமனுார், கணேசபுரம், தெப்பம்பட்டி வழியாக பாலக்கோம்பை கண்மாய்க்கு நீர் கொண்டுவர விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். அதற்கான நடவடிக்கை இல்லை. கண்மாய் நீர்த்தேக்க பரப்பில் மேல் பகுதியில் இருந்த மண் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. அடிப்பகுதியில் மணல் பரப்பாக உள்ளது. இதனால் கண்மாயில் தேங்கும் நீரும் சில நாட்களில் வற்றி விடுகிறது. கண்மாயில் முழு அளவில் நீர் தேக்கும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயத்தை பாதுகாக்க முடியும். சில ஆண்டுகளில் இப்பகுதியில் விவசாய சாகுபடி கேள்விக் குறியாகிவிடும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.