/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதிகளை பின்பற்றாத 40 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை: வேளாண் தரக்கட்டுப்பாடு அலுவலர் தகவல்
/
விதிகளை பின்பற்றாத 40 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை: வேளாண் தரக்கட்டுப்பாடு அலுவலர் தகவல்
விதிகளை பின்பற்றாத 40 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை: வேளாண் தரக்கட்டுப்பாடு அலுவலர் தகவல்
விதிகளை பின்பற்றாத 40 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை: வேளாண் தரக்கட்டுப்பாடு அலுவலர் தகவல்
ADDED : ஜூலை 05, 2024 05:40 AM

மாவட்டத்தில் விதிகளை பின்பற்றாமல் செயல்பட்ட 40 உரக்கடைகளில் உர விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் மணிகண்ட பிரசன்னா தெரிவித்தார்.
தேனி வேளாண்,தோட்டக்கலை பயிர்கள் அதிகம் சாகுபடியாகும் மாவட்டம் ஆகும். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக நடைபெறுகிறது.
பயிர் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை எவ்வித பிரச்னையும் இன்றி மகசூல் பெறவும், தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வேளாண் துறை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இதில் பிரதான பணியாக உர வினியோகமாகும். இப் பணி பற்றி வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் மணிகண்ட பிரசன்னா தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:
தரக்கட்டுப்பாட்டின் முக்கிய பணி என்ன
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாதந்தோறும் வழங்க வேண்டிய உர வினியோக திட்டப்படி மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. அதன்படி நிறுவனங்களிடமிருந்து மாவட்டத்திற்கு தேவையான உரங்கள் வழங்கப்படுகிறதா என கண்காணித்து, அனைத்து பகுதி விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்தல், விற்பனை நிலையங்களில் விதிகள் பின்பற்றப்படுவதை ஆய்வு செய்தல் ஆகும். மேலும், விதி மீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பது. பயிர்கள் பூச்சி, நோய் தாக்குதல் பற்றி வட்டார அலுவலர்களுடன் இணைந்து கண்காணித்தல், உர மாதிரிகள் எடுத்து ஆய்விற்கு அனுப்புதல் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனரின் முக்கிய பணிகளாகும்.
மாவட்டத்தில் ஓராண்டிற்கு தேவைப்படும் உரம் எவ்வளவு சாகுபடிக்கு சராசரியாக ஆண்டிற்கு யூரியா 14ஆயிரம் டன், டி.ஏ.பி., 3,800 டன், பொட்டாஷ் 4,300 டன், காம்ளக்ஸ் உரங்கள் 17,000 டன் தேவைப்படுகிறது. இதில் பொட்டாஷ் உரம் வெளிநாடுகளில்இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உரங்கள் 235 தனியார் கடைகள், 75 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. உரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா உரங்களில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்துக்கள் அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது.
இயற்கை உர பயன்பாடு எந்த நிலையில் உள்ளதுவேளாண்துறை சார்பில விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக உயிர் உரம், பசுந்தாள் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. பசுந்தாள் உரம் 50 சதவீத மானியத்தில் 35,000 ஏக்கரில் பயிரிட வழங்கப்பட உள்ளது. அதே போல் உயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரிலியம், ரைசோபியம், பொட்டாஷ் சத்துகளை நிலத்தில் நிலை நிறுத்துவதற்கான பாக்டீரியா ஆகியவை 50 சதவீத மானியத்தில் 10ஆயிரம் ஏக்கருக்கு வழங்கப்பட உள்ளது.
போலி உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா மாவட்டத்தில் போலி உரங்கள் கண்டறியப்பட வில்லை. விவசாயிகள் அங்கிகரிக்கப்பட்ட உர விற்பனை நிலையங்களில் மட்டும் வாங்க வேண்டும். கிராம பகுதிகளுக்கு வாகனங்களில் வந்து விற்பனை செய்பவர்களிடம் வாங்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். விவசாயிகள் உரங்கள் போலி உரமா என்ற சந்தேகம் எழுந்தால், வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அந்த உரத்தின் மாதிரி எடுத்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். உரவிற்பனை நிலையங்களுக்கான வழிமுறைகள் என்ன
உர விற்பனை செய்ய உரிமம் பெறுவது கட்டாயம். கடைகளில் கையிருப்பு உள்ள உரங்கள், விலைப்பட்டியில் விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை முனையம்(பி.ஓ.எஸ்.,) மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரிமத்தில் அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களிடமிருந்து மட்டுமே உரம் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் இருந்து ஆதார் எண், கைரேகை பதிவு பெற்ற பின் உரங்கள் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்துகிறோம்.
விதிமீறிய கடைகள் மீது எடுத்த நடவடிக்கைகள் பற்றி
அரசு குறிப்பிட்ட விதிகளை மீறு கடைகளில் உரங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அதில் உண்மை இருப்பிற்கும் பி.ஓ.எஸ்., கருவியில் உள்ள இருப்பிற்கும் வேறுபாடு இருந்த 13 கடைகள், உரிமத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களை தவிர உரங்களை பிறநிறுவனங்களிடமிருந்து பெற்று விற்பனை செய்ய 27 கடைகள் கண்டறியப்பட்டது. ஓராண்டில் விதி மீறிய மேற்குறிப்பிட்ட 40 கடைகளில் உர விற்பனை தடை செய்யப்பட்டது.
உரம் வாங்குவோரை கண்காணிக்கிறீர்களா
மாவட்டத்தில் மாதந்தோறும் அதிக அளவில் யூரியா வாங்கும் விவசாயிகள் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் அதனை வேளாண் தேவைக்கும் மட்டும் தான் பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்கின்றோம்.
பூச்சி மருத்து தெளிக்கும் போது உயிரிழப்புகள் ஏற்படுகிறதே
உழவர் வயல் வெளி பள்ளிகள், விவசாயிகளுக்கான பயிற்சிகளில் தொடர்ந்து பூச்சி மருந்து தெளிக்கும் போது எவ்வாறு செயல்பட வேண்டும். பின்பற்ற வேண்டிய முறைகள் பற்றி விளக்குகின்றோம். பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்துகளை மட்டும் சார்ந்திராமல் கோடை உழவு, நன்மை செய்யும்பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்துதல் ஆகிய முறைகளில் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றோம்.
பொருளாதார சேத நிலை ஏற்படும் வரை பூச்சி மருத்து தெளிக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். அதிக அளவில் பூச்சி மருந்துகள் தெளிக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம். மருந்து தெளிக்கும் போது கையுறை, மாஸ்க், முழுச்சட்டை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தவும், வீரியமிக்க இரு மருந்துகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்.
தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா மாவட்டத்தில் தடை செய்த பூச்சி மருந்து விற்பனை இல்லை. மருந்து கடைகளில் வட்டார வேளாண் அலுவலர்கள் மாதந்தோறும் சோதனை செய்கின்றனர். காலாவதியான மருந்துகள் கண்டறியப்பட்டால் அதனை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பபடுகிறது. மண்புழு உரங்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளை மண்புழு உரங்கள் பயன்படுத்துமாறு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தப்புக்குண்டு, கெங்குவார்பட்டி, சின்னமனுார், கம்பம் ஆகிய பகுதிகளில் 6 பேர் மண்புழு உரங்கள் தயாரிக்க அனுமதி பெற்று உற்பத்தி செய்கின்றனர். இந்தாண்டு மாவட்டத்தில் 50 மண்புழு குடில்கள் அமைக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது.
விவசாயிகள் ரசாயன உரங்களை மட்டும் நம்பி இருக்காமல் இயற்கை உரங்களான பசுந்தாள் உரம், மண்புழு உரம், தொழு உரம் பயன்படுத்த வேண்டும்.
வயல்களில் பூச்சி, நோய் தாக்குதல் கண்டறிந்தால் வேளாண் அலுவலர்கள் ஆலோசனைக்குப்பின் மருந்து பயன்படுத்த வேண்டும். மருந்து தெளிக்கும் போது உணவு சாப்பிடுதல், புகைப்பிடித்தல், குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதை தவிர்க்க வேண்டும். ஒரு வகையான பயிர்களை சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்கள் அடிப்படையில் உரங்கள் பயன்படுத்தினால் செலவுகள் குறையும்,மண்வளம் பாதுகாக்கப்படும். மருந்துகள், உரங்கள் வைக்கும் பகுதியில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது என்றார்.