/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹைமாஸ் விளக்குகள் பயன்பாட்டிற்கு வராததால் அரசு நிதி வீண் அரசு துறைகள் ஒருங்கிணைப்பு இன்றி ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை இருளில் தவிப்பு
/
ஹைமாஸ் விளக்குகள் பயன்பாட்டிற்கு வராததால் அரசு நிதி வீண் அரசு துறைகள் ஒருங்கிணைப்பு இன்றி ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை இருளில் தவிப்பு
ஹைமாஸ் விளக்குகள் பயன்பாட்டிற்கு வராததால் அரசு நிதி வீண் அரசு துறைகள் ஒருங்கிணைப்பு இன்றி ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை இருளில் தவிப்பு
ஹைமாஸ் விளக்குகள் பயன்பாட்டிற்கு வராததால் அரசு நிதி வீண் அரசு துறைகள் ஒருங்கிணைப்பு இன்றி ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை இருளில் தவிப்பு
ADDED : செப் 08, 2024 05:04 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி எல்லைகளில் 5 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை துறையால் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் ஓராண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அரசு துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
கொச்சி --- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி பகுதியில் பல இடங்கள் இருள் சூழ்ந்துள்ளது. இரவில் வரும் வாகனங்களுக்கு வெளிச்சம் ஏற்படுத்துவதற்கு வசதியாக பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட ஐந்து இடங்களில் பல மாதங்களுக்கு முன் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டன. டி.சுப்புலாபுரம் விலக்கு, டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு, கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட், சக்கம்பட்டி, தாலுகா அலுவலகம் எதிர்புறம் ஆகிய 5 இடங்களில் 30 மீட்டர் உயரத்தில் அதிக வாட்ஸ் திறன் கொண்ட விளக்குகளின் வெளிச்சம் 100 மீட்டர் சுற்றளவு வரை தெரியும். இந்த வெளிச்சம் வாகன ஓட்டிகளுக்கும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர்.
ஒதுங்கிய தேசிய நெடுஞ்சாலை துறை:
ஹைமாஸ் விளக்குகள் அமைத்து பல மாதத்திற்குப்பின் மின் இணைப்புகள் வழங்கப்பட்டும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
ஹைமாஸ் விளக்குகள் அமைத்ததும் தங்கள் பணி முடிந்ததாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஒதுங்கிக் கொண்டனர். ஹைமாஸ் விளக்குகள் பராமரிப்பை யாரிடம் ஒப்படைப்பது, யார் பராமரிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹைமாஸ் விளக்குகளுக்கான மின்சார செலவு அதிகமாகும் என்பதால் நிதி நிலையை காரணம் காட்டி ஆண்டிபட்டி பேரூராட்சி, டி.சுப்புலாரம், ராஜகோபாலன்பட்டி, பிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினரும் இதில் அக்கறை காட்டவில்லை. இதனால் விளக்கு வசதி செய்தும் எரியாமல் பயன்பாடு இன்றி முடங்கியுள்ளது. பொதுமக்கள் கருத்து
மத்திய அரசின் திட்ட நிதி வீணாகிறது
வீரகுமார், ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகளுக்கான மதிப்பு ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை உள்ளது.
ஹைமாஸ் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை.
பணிகள் முடிந்த பின்பும் அதனை உரிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் இல்லை என்ற புகார் உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் நிதி ரூபாய் பல லட்சம் வீணாகி உள்ளது.
மின் கட்டணத்தை சிறப்பு நிதியில் ஈடுகட்ட வேண்டும்
ரத்தினபாண்டி, ஆண்டிபட்டி: ஹைமாஸ் விளக்குகளுக்கான மின்சார செலவை எப்படி சமாளிப்பது என்று முன்கூட்டியே திட்டமிடவில்லை. சூரிய ஒளி மின்சாரம் மூலம் இதனை இயக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஓராண்டாகியும் இதுகுறித்து எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. விளக்குகளுக்கான மின்சார செலவுகளை சிறப்பு நிதி மூலம் ஈடு செய்யலாம்.
மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைக்க வேண்டும்
தீர்வு: பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ைஹமாஸ் விளக்குள் ஒரு ஆண்டுக்கு மேலாக முடங்கிய திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களை ஒருங்கிணைத்து ஹைமாஸ் விளக்குகளை எரிய வைப்பதற்கான வழிகாட்டுதல் ஏற்படுத்த வேண்டும்.