/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டம் 172 நாட்கள் நடத்தாததால் ஆர்.டி.ஓ., நடத்தினார்
/
ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டம் 172 நாட்கள் நடத்தாததால் ஆர்.டி.ஓ., நடத்தினார்
ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டம் 172 நாட்கள் நடத்தாததால் ஆர்.டி.ஓ., நடத்தினார்
ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டம் 172 நாட்கள் நடத்தாததால் ஆர்.டி.ஓ., நடத்தினார்
ADDED : ஜூலை 27, 2024 05:23 AM
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தொடர்ந்து நடத்தாததால் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 கவுன்சிலர்களில், அ.தி.மு.க.,11, தி.மு.க.,6, காங்.,1, அ.ம.மு.க., 1 உள்ளனர். ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த லோகிராஜன், துணைத் தலைவராக வரதராஜன் உள்ளனர். ஒன்றியக்குழு கூட்டம் 2022 அக். 28 ல் நடந்தது. அடுத்த கூட்டம் 172 நாட்கள் கடந்த பின் 2023 ஏப்., 19 ல் நடந்தது. தொடர்ந்து 60 நாட்களுக்கு மேல் கூட்டம் நடத்தாதல் ஊராட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க., கவுன்சிலர்கள் கலெக்டர், உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தனர். இம் மனு மீது சமீபத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதால் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
17 கவுன்சிலர்கள் ஆதரவு
பெரியகுளம் ஆர்.டி.ஓ.,முத்துமாதவன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், பி.டி.ஓ., போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர், துணைத்தலைவர் உட்பட 19 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்ட அரங்கின் கதவுகள் பூட்டப்பட்டு பத்திரிகையாளர்கள் இதர அலுவலர்கள் அனுமதிக்கவில்லை. விசாரணையில் தொடர்ந்து 172 நாட்கள் ஒன்றியக்குழு கூட்டத்தை நடத்தாத ஒன்றியக்குழு தலைவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகுதி நீக்கத்திற்கு ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறீர்கள் எதிராக எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று ஆர்.டி.ஓ., கேள்வி எழுப்பினார். வார்டு கவுன்சிலர்களில் 17 பேர் கை தூக்கி தலைவர் மீது நடவடிக்கை தேவை இல்லை என்று கூறி தலைவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தலைவர் மீதான புகார் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவித்து ஆர்.டி.ஓ.,கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்களும் அ.தி.மு.க., ஒன்றிய தலைவருக்கு ஆதரவாக கை தூக்கியதாக வெளியே இருந்த தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் தம்பி ஒன்றிய தலைவர் லோகிராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் பேசியதாக தி.மு.க.,புகார்
இது குறித்து ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், மற்ற தி.மு.க., கவுன்சிலர்களுடன் சேர்ந்து தெரிவித்ததாவது: பெரியகுளம் ஆர்.டி.ஓ., ஒருதலைப் பட்சமாக நடந்துள்ளார். கவுன்சிலர்களிடம் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக கூறி, கவுன்சிலர்களை திசை திருப்பி எத்தனை பேர் ஆதரவு தெரிவிக்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் கேட்டதால் ஆங்கிலம் புரியாத பெண் கவுன்சிலர்கள் வேறு வழி தெரியாமல் ஆதரவு தெரிவித்து கை தூக்கி உள்ளனர். இந்தக் கூட்டம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான கூட்டம் இல்லை. தொடர்ந்து ஆறு மாதங்களாக கவுன்சில் கூட்டம் நடைபெறாமல் இருந்ததற்கான கருத்து கேட்பு கூட்டம் என்று தான் அழைப்பு விடப்பட்டது. ஒன்றிய குழு தலைவருக்கு ஆதரவாக ஆர்.டி.ஓ., செயல்பட்டுள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.