/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு, சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் ஒழிப்பு, சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
பிளாஸ்டிக் ஒழிப்பு, சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
பிளாஸ்டிக் ஒழிப்பு, சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
ADDED : ஆக 26, 2024 05:59 AM
கம்பம் நகர் சுற்றுப் புறச் சூழல் பாதிப்பில் இருந்து மீள நகரில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரங்கன்றுகளை நடவு செய்து வளர்க்க வேண்டும். அப்போது தான் சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும். சேகரமாகும் கழிவுநீரையும் சுத்திகரித்து வேளாண் சாகுபடிக்கு பயன்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கம்பத்தில் ரோட்டிற்கு கிழக்கு திசையில் 2 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடியாகிறது. முல்லைப் பெரியாறு பாசனம் என்ற போதும், குறிப்பிட்ட சில பகுதிகள் கண்மாய் பாசனமாக உள்ளது. கம்பத்தில் வீரப்ப நாயக்கன்குளம் உள்ளது. 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் சமீபத்தில் சாக்கடை கழிவு நீர் சேகரமாகும் குளமாக மாறி விட்டது.
நகரில் சேகரமாகும் சாக்கடை நீர், செப்டிக் டேங்க் கழிவுகள், கோழி, இறைச்சி கழிவுகள், குப்பை, பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், உடைந்த பாட்டில்கள் என அனைத்தும் சேனை ஒடை வழியாக வந்து வீரப்ப நாயக்கன் குளத்தில் சங்கமமாகிறது.
பாசனத்திற்கு என வரும் ஆற்று நீரும், சாக்கடை கழிவு நீர், இறைச்சிக் கழிவுகள் ஒன்று சேர்ந்து, கண்மாய் நீரை கருப்பு கலராக மாற்றி உள்ளது. குளத்திற்கு கீழ் பக்கம் உள்ள நெல் வயல்கள், காமயக் கவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள நெல் வயல்களுக்கு இந்த கண்மாய் நீர் பாய்ச்சும் போது, பயிர்கள் சுருண்டு தலை சாய்ந்து விடுகிறது.
நெல் வயல்கள் பாதிக்கப் படுவதுடன், வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கு தோலில் அரிப்பு ஏற்படுகிறது. உடைந்த பாட்டில்கள் கால்களில் காயத்தை ஏற்படுத்துகிறது. சுற்றுப்புறச்சூழல்மாசு பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்
யேசுராஜா, நன்செய் அறக்கட்டளை: சுற்றுப்புறச் சூழல் மாசு படாமல் இருக்கவும், மழை வளம் கிடைக்கவும் கம்பம் பள்ளத்தாத்தில் ஆயிரக்கணக்கான மரங்கன்றுகளை பல ஊர்களில் நடவு செய்து உள்ளோம்.
கம்பம் இப்பகுதியில் பெரிய ஊராகும். எங்கள் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடுவது மட்டும் இன்றி பிளாஸ்டிக் ஒழிப்பில் கவனம் செலுத்துகின்றோம். இதற்கு என மஞ்சப் பை வழங்கி வருகிறோம். அடர்வனங்களை குறுங்காடு உத்தமபாளையம் கல்லூரி, லோயர்கேம்ப் பள்ளி, கலெக்டர் அலுவலக வளாகம் போன்ற இடங்களில் உருவாக்கி உள்ளோம். கம்பத்தில் வீரப்ப நாயக்கன் குளத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
குளத்தில் தேங்கும் பிளாஸ்டிக், பாட்டில்களை அகற்ற சிறப்பு முகாம் நடத்த உள்ளோம். இதில் பல தன்னார்வலர் அமைப்புக்கள், பொதுமக்கள் பங்கேற்கும் மக்கள் இயக்கமாக இருக்கும்.
இடம் கிடைத்தால் கம்பம் நகரில் குறுங்காடு அமைக்க முயற்சி செய்வோம். வீடுதோறும் மூலிகைச் செடிகள், மாடி தோட்டம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரங்கன்றுகள் நட்டு வளர்க்க முடிவு செய்துள்ளோம்., என்றார்.
தினமும் விழிப்புணர்வு வகுப்பு
விஸ்வநாதன், தாளாளர், நாலந்தா பள்ளி, கம்பம் : கம்பம் நகரில் குறுங்காடு ஒன்றை அமைக்க வேண்டும். ஏற்கெனவே பல தன்னார்வலர்கள் மரங்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். எங்கள் பள்ளி மாணவர்களை வீடுகளில் மூலிகைத் தோட்டம் வைக்க வலியுறுத்தி வருகிறோம். வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது.
இதை தவிர்க்க வன உயிரின வாழ்விடங்களை பாதுகாத்திட வேண்டும். எங்கள் பள்ளி வளாகத்தில் பல வகையான மரக்கன்றுகளை நடவு செய்து உள்ளோம். பள்ளி மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல் வகுப்புக்கள் தினமும் நடத்தப்படுகின்றன. நகருக்குள் இடம் இல்லாவிட்டாலும், நகரை சுற்றி கண்மாய் கரைகள், 18 ம் கால்வாய் கரைகளில் மரங்கன்றுகளை நட்டு வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எங்கள் பள்ளி சார்பில் அதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளோம்., என்றார்.

